நீரு ளார்கயல் வாவி பாடல் வரிகள் (niru larkayal vavi) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்களர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருக்களர்
சுவாமி : களர்முளைநாதர்,
அம்பாள் : இளங்கொம்பன்னாள்
நீரு ளார்கயல் வாவி
நீரு ளார்கயல் வாவி சூழ்பொழில்
நீண்ட மாவய லீண்டு மாமதில்
தேரினார் மறுகில் விழாமல்கு திருக்களருள்
ஊரு ளாரிடு பிச்சை பேணும்
ஒருவ னேயொளிர் செஞ்ச டைம்மதி
ஆர நின்றவனே அடைந்தார்க் கருளாயே. 1
தோளின் மேலொளி நீறு தாங்கிய
தொண்டர் வந்தடி போற்றி மிண்டிய
தாளினார் வளருந் தவம்மல்கு திருக்களருள்
வேளின் நேர்விச யற்க ருள்புரி
வித்த காவிரும் பும்ம டியாரை
ஆளுகந் தவனே அடைந்தார்க் கருளாயே. 2
பாட வல்லநல் மைந்த ரோடு
பனிம லர்பல கொண்டு போற்றிசெய்
சேடர்வாழ் பொழில்சூழ் செழுமாடத் திருக்களருள்
நீட வல்ல நிமல னேயடி
நிரைக ழல்சிலம் பார்க்க மாநடம்
ஆடவல் லவனே அடைந்தார்க் கருளாயே. 3
அம்பின் நேர்தடங் கண்ணி னாருடன்
ஆட வர்பயில் மாட மாளிகை
செம்பொனார் பொழில்சூழ்ந் தழகாய திருக்களருள்
என்பு பூண்டதோர் மேனி யெம்மிறைவா
இணையடி போற்றி நின்றவர்க்
கன்புசெய் தவனே அடைந்தார்க் கருளாயே. 4
கொங்கு லாமலர்ச் சோலை வண்டினம்
கிண்டி மாமது வுண்டி சைசெயத்
தெங்குபைங் கமுகம் புடைசூழ்ந்த திருக்களருள்
மங்கை தன்னொடுங் கூடிய மண
வாள னேபிணை கொண்டொர் கைத்தலத்
தங்கையிற் படையாய் அடைந்தார்க் கருளாயே. 5
கோல மாமயில் ஆலக் கொண்டல்கள்
சேர்பொ ழிற்குல வும்வ யலிடைச்
சேலிளங் கயலார் புனல்சூழ்ந்த திருக்களருள்
நீலம் மேவிய கண்டனே நிமிர்
புன்ச டைப்பெரு மானெ னப்பொலி
ஆலநீ ழலுளாய் அடைந்தார்க் கருளாயே. 6
தம்ப லம்மறி யாதவர் மதில்
தாங்கு மால்வரை யால ழலெழத்
திண்பலங் கெடுத்தாய் திகழ்கின்ற திருக்களருள்
வம்ப லர்மலர் தூவி நின்னடி
வான வர்தொழக் கூத்து கந்துபேர்
அம்பலத் துறைவாய் அடைந்தார்க் கருளாயே. 7
குன்ற டுத்தநன் மாளிகைக் கொடி
மாட நீடுயர் கோபு ரங்கள்மேல்
சென்றடுத் துயர்வான் மதிதோயுந் திருக்களருள்
நின்ற டுத்துயர் மால்வ ரைத்திரள்
தோளி னாலெடுத் தான்றன் நீள்முடி
அன்றடர்த் துகந்தாய் அடைந்தார்க் கருளாயே. 8
பண்ணி யாழ்பயில் கின்ற மங்கையர்
பாட லாடலொ டார வாழ்பதி
தெண்ணிலா மதியம் பொழில்சேருந் திருக்களருள்
உண்ணி லாவிய வொருவ னேயிரு
வர்க்கு நின்கழல் காட்சி யாரழல்
அண்ணலாய எம்மான் அடைந்தார்க் கருளாயே. 9
பாக்கி யம்பல செய்த பத்தர்கள்
பாட்டொ டும்பல பணிகள் பேணிய
தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள்
வாக்கின் நான்மறை யோதி னாயமண்
தேரர் சொல்லிய சொற்க ளானபொய்
ஆக்கிநின் றவனே அடைந்தார்க் கருளாயே. 10
இந்து வந்தெழு மாட வீதியெ
ழில்கொள் காழிந் நகர்க் கவுணியன்
செந்துநேர் மொழியார் அவர்சேருந் திருக்களருள்
அந்தி யன்னதொர் மேனி யானை
அமரர் தம்பெரு மானை ஞானசம்
பந்தன்சொல் லிவைபத் தும்பாடத் தவமாமே.
திருச்சிற்றம்பலம்