நீரிடைத் துயின்றவன் பாடல் வரிகள் (niritait tuyinravan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருஉசாத்தானம் – கோவிலூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருஉசாத்தானம் – கோவிலூர்
சுவாமி : மந்திரபுரீசுவரர்
அம்பாள் : பெரியநாயகியம்மை

நீரிடைத் துயின்றவன்

நீரிடைத் துயின்றவன்
தம்பிநீள் சாம்புவான்
போருடைச் சுக்கிரீ
வன்னநு மான்றொழக்
காருடை நஞ்சுண்டு
காத்தருள் செய்தஎம்
சீருடைச் சேடர்வாழ்
திருவுசாத் தானமே. 1

கொல்லையே றுடையவன்
கோவண ஆடையன்
பல்லையார் படுதலைப்
பலிகொளும் பரமனார்
முல்லையார் புறவணி
முதுபதி நறைகமழ்
தில்லையான் உறைவிடந்
திருவுசாத் தானமே. 2

தாமலார் போலவே
தக்கனார் வேள்வியை
ஊமனார் தங்கனா
வாக்கினான் ஒருநொடிக்
காமனா ருடல்கெடக்
காய்ந்தஎங் கண்ணுதல்
சேமமா உறைவிடந்
திருவுசாத் தானமே. 3

மறிதரு கரத்தினான்
மால்விடை யேறியான்
குறிதரு கோலநற்
குணத்தினார் அடிதொழ
நெறிதரு வேதியர்
நித்தலும் நியமஞ்செய்
செறிதரு பொழிலணி
திருவுசாத் தானமே. 4

இப்பதிகத்தில் 5-ம் செய்யுட்கள் மறைந்து போயின. 5

இப்பதிகத்தில் 6-ம் செய்யுட்கள் மறைந்து போயின. 6

பண்டிரைத் தயனுமா
லும்பல பத்தர்கள்
தொண்டிரைத் தும்மலர்
தூவித்தோத் திரஞ்சொலக்
கொண்டிரைக் கொடியொடுங்
குருகினின் நல்லினந்
தெண்டிரைக் கழனிசூழ்
திருவுசாத் தானமே. 7

மடவரல் பங்கினன்
மலைதனை மதியாது
சடசட எடுத்தவன்
தலைபத்து நெரிதர
அடர்தர ஊன்றியங்
கேயவற் கருள்செய்தான்
திடமென வுறைவிடந்
திருவுசாத் தானமே. 8

ஆணலார் பெண்ணலார்
அயனொடு மாலுக்குங்
காணொணா வண்ணத்தான்
கருதுவார் மனத்துளான்
பேணுவார் பிணியொடும்
பிறப்பறுப் பானிடஞ்
சேணுலா மாளிகைத்
திருவுசாத் தானமே. 9

கானமார் வாழ்க்கையான்
காரமண் தேரர்சொல்
ஊனமாக் கொண்டுநீர்
உரைமின்உய் யவெனில்
வானமார் மதிலணி
மாளிகை வளர்பொழில்
தேனமா மதியந்தோய்
திருவுசாத் தானமே 10

வரைதிரிந் திழியுநீர்
வளவயற் புகலிமன்
திரைதிரிந் தெறிகடல்
திருவுசாத் தானரை
உரைதெரிந் துணருஞ்சம்
பந்தனொண் தமிழ்வல்லார்
நரைதிரை யின்றியே
நன்னெறி சேர்வரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment