நிறைவெண்டிங்கள் வாண்முக பாடல் வரிகள் (niraiventinkal vanmuka) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் சிற்றேமம் – சிதாமூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : சிற்றேமம் – சிதாமூர்
சுவாமி : பொன்வைத்தநாதர்
அம்பாள் : அகிலாண்டேசுவரியம்மை

நிறைவெண்டிங்கள் வாண்முக

நிறைவெண்டிங்கள் வாண்முக
மாதர்பாட நீள்சடைக்
குறைவெண்டிங்கள் சூடியோர்
ஆடல்மேய கொள்கையான்
சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற்
பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
இறைவனென்றே யுலகெலாம்
ஏத்தநின்ற பெருமானே. 1

மாகத்திங்கள் வாண்முக
மாதர்பாட வார்சடைப்
பாகத்திங்கள் சூடியோ
ராடல்மேய பண்டங்கன்
மேகத்தாடு சோலைசூழ்
மிடைசிற்றேமம் மேவினான்
ஆகத்தோர்கொள் ஆமையைப்
பூண்டஅண்ணல் அல்லனே. 2

நெடுவெண்டிங்கள் வாண்முக
மாதர்பாட நீள்சடைக்
கொடுவெண்டிங்கள் சூடியோ
ராடல்மேய கொள்கையான்
படுவண்டியாழ்செய் பைம்பொழிற்
பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
கடுவெங்கூற்றைக் காலினாற்
காய்ந்தகடவுள் அல்லனே. 3

கதிரார்திங்கள் வாண்முக
மாதர்பாடக் கண்ணுதல்
முதிரார்திங்கள் சூடியோ
ராடல்மேய முக்கணன்
எதிரார்புனலம் புன்சடை
யெழிலாருஞ்சிற் றேமத்தான்
அதிரார்பைங்கண் ஏறுடை
யாதிமூர்த்தி யல்லனே. 4

வானார்திங்கள் வாண்முக
மாதர்பாட வார்சடைக்
கூனார்திங்கள் சூடியோ
ராடல்மேய கொள்கையான்
தேனார்வண்டு பண்செயுந்
திருவாருஞ்சிற் றேமத்தான்
மானார்விழிநன் மாதொடும்
மகிழ்ந்தமைந்தன் அல்லனே. 5

பனிவெண்டிங்கள் வாண்முக
மாதர்பாடப் பல்சடைக்
குனிவெண்டிங்கள் சூடியோ
ராடல்மேய கொள்கையான்
தனிவெள்விடையன் புள்ளினத்
தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
முனிவுமூப்பும் நீக்கிய
முக்கண்மூர்த்தி அல்லனே. 6

கிளருந்திங்கள் வாண்முக
மாதர்பாடக் கேடிலா
வளருந்திங்கள் சூடியோ
ராடல்மேய மாதவன்
தளிருங்கொம்பும் மதுவுமார்
தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
ஒளிரும்வெண்ணூல் மார்பனென்
னுள்ளத்துள்ளான் அல்லனே. 7

சூழ்ந்ததிங்கள் வாண்முக
மாதர்பாடச் சூழ்சடைப்
போழ்ந்ததிங்கள் சூடியோ
ராடல்மேய புண்ணியன்
தாழ்ந்தவயற்சிற் றேமத்தான்
தடவரையைத்தன் தாளினால்
ஆழ்ந்தஅரக்கன் ஒல்கஅன்
றடர்த்தஅண்ணல் அல்லனே. 8

தனிவெண்டிங்கள் வாண்முக
மாதர்பாடத் தாழ்சடைத்
துணிவெண்டிங்கள் சூடியோ
ராடல்மேய தொன்மையான்
அணிவண்ணச்சிற் றேமத்தான்
அலர்மேலந்த ணாளனும்
மணிவண்ணனுமுன் காண்கிலா
மழுவாட்செல்வன் அல்லனே. 9

வெள்ளைத்திங்கள் வாண்முக
மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள் சூடியோ
ராடல்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தார்சிற் றேமத்தான்
உருவார்புத்தர் ஒப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கியுட்
கரந்துவைத்தான் அல்லனே. 10

கல்லிலோதம் மல்குதண்
கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய வின்றமிழ்
நவிலும்ஞான சம்பந்தன்
செல்வனூர்சிற் றேமத்தைப்
பாடல்சீரார் நாவினால்
வல்லராகி வாழ்த்துவார்
அல்லலின்றி வாழ்வரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment