நெய்தற் குருகுதன் பாடல் வரிகள் (neytar kurukutan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருகழிப்பாலை – சிவபுரி தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருகழிப்பாலை – சிவபுரி
சுவாமி : பால்வண்ணநாதர்
அம்பாள் : வேதநாயகி
நெய்தற் குருகுதன்
நெய்தற் குருகுதன் பிள்ளையென்
றெண்ணி நெருங்கிச்சென்று
கைதை மடற்புல்கு தென்கழிப்
பாலை யதனுறைவாய்
பைதற் பிறையொடு பாம்புடன்
வைத்த பரிசறியோம்
எய்தப் பெறின்இரங் காதுகண்
டாய்நம் மிறையவனே. 1
பருமா மணியும் பவளமுத்
தும்பரந் துந்திவரை
பொருமால் கரைமேற் றிரைகொணர்ந்
தெற்றப் பொலிந்திலங்குங்
கருமா மிடறுடைக் கண்டனெம்
மான்கழிப் பாலையெந்தை
பெருமா னவனென்னை யாளுடை
யானிப் பெருநிலத்தே. 2
நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற்
றிங்கு நமன்தமராற்
கோட்பட் டொழிவதன் முந்துற
வேகுளி ரார்தடத்துத்
தாட்பட்ட தாமரைப் பொய்கையந்
தண்கழிப் பாலையண்ணற்
காட்பட் டொழிந்தமன் றேவல்ல
மாயிவ் வகலிடத்தே.
இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைந்து போயின.
திருச்சிற்றம்பலம்