நம்பனை நகர பாடல் வரிகள் (nampanai nakara) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கச்சிஏகம்பம் – காஞ்சிபுரம் தலம் தொண்டைநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : தொண்டைநாடு
தலம் : திருக்கச்சிஏகம்பம் – காஞ்சிபுரம்
சுவாமி : தழுவக்குழைந்த நாதர்
அம்பாள் : ஏலவார்குழலி

நம்பனை நகர

நம்பனை நகர மூன்றும்
எரியுண வெருவ நோக்கும்
அம்பனை அமுதை யாற்றை
அணிபொழிற் கச்சி யுள்ளே
கம்பனைக் கதிர்வெண் திங்கட்
செஞ்சடைக் கடவுள் தன்னைச்
செம்பொனைப் பவளத் தூணைச்
சிந்தியா எழுகின் றேனே. 1

ஒருமுழம் உள்ள குட்டம்
ஒன்பது துளையு டைத்தாய்
அரைமுழம் அதன் அகலம்
அதனில்வாழ் முதலை ஐந்து
பெருமுழை வாய்தல் பற்றிக்
கிடந்துநான் பிதற்று கின்றேன்
கருமுகில் தவழும் மாடக்
கச்சியே கம்ப னீரே. 2

மலையினார் மகளோர் பாக
மைந்தனார் மழுவொன் றேந்திச்
சிலையினால் மதில்கள் மூன்றுந்
தீயெழச் செற்ற செல்வர்
இலையினார் சூலம் ஏந்தி
ஏகம்பம் மேவி னாரைத்
தலையினால் வணங்க வல்லார்
தலைவர்க்குந் தலைவர் தாமே. 3

பூத்தபொற் கொன்றை மாலை
புரிசடைக் கணிந்த செல்வர்
தீர்த்தமாங் கங்கை யாளைத்
திருமுடி திகழ வைத்து
ஏத்துவார் ஏத்த நின்ற
ஏகம்பம் மேவி னாரை
வாழ்த்துமா றறிய மாட்டேன்
மால்கொடு மயங்கி னேனே. 4

மையினார் மலர்நெ டுங்கண்
மங்கையோர் பங்க ராகிக்
கையிலோர் கபாலம் ஏந்திக்
கடைதொறும் பலிகொள் வார்தாம்
எய்வதோர் ஏனம் ஓட்டி
ஏகம்பம் மேவி னாரைக்
கையினாற் றொழவல் லார்க்குக்
கடுவினை களைய லாமே. 5

தருவினை மருவுங் கங்கை
தங்கிய சடையன் எங்கள்
அருவினை அகல நல்கும்
அண்ணலை அமரர் போற்றுந்
திருவினைத் திருவே கம்பஞ்
செப்பிட உறைய வல்ல
உருவினை உருகி ஆங்கே
உள்ளத்தால் உகக்கின் றேனே. 6

கொண்டதோர் கோல மாகிக்
கோலக்கா வுடைய கூத்தன்
உண்டதோர் நஞ்ச மாகில்
உலகெலாம் உய்ய உண்டான்
எண்டிசை யோரும் ஏத்த
நின்றஏ கம்பன் றன்னைக்
கண்டுநான் அடிமை செய்வான்
கருதியே திரிகின் றேனே. 7

படமுடை அரவி னோடு
பனிமதி யதனைச் சூடிக்
கடமுடை யுரிவை மூடிக்
கண்டவர் அஞ்ச அம்ம
இடமுடைக் கச்சி தன்னுள்
ஏகம்பம் மேவி னான்றன்
நடமுடை யாடல் காண
ஞாலந்தான் உய்ந்த வாறே. 8

பொன்றிகழ் கொன்றை மாலை
பொருந்திய நெடுந்தண் மார்பர்
நன்றியிற் புகுந்தெ னுள்ளம்
மெள்ளவே நவில நின்று
குன்றியில் அடுத்த மேனிக்
குவளையங் கண்டர் எம்மை
இன்றுயில் போது கண்டார்
இனியர்ஏ கம்ப னாரே. 9

துருத்தியார் பழனத் துள்ளார்
தொண்டர்கள் பலரும் ஏத்த
அருத்தியால் அன்பு செய்வார்
அவரவர்க் கருள்கள் செய்தே
எருத்தினை இசைய ஏறி
ஏகம்பம் மேவி னார்க்கு
வருத்திநின் றடிமை செய்வார்
வல்வினை மாயு மன்றே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment