Sivan Songs

மின்னுஞ் சடைமேல் பாடல் வரிகள் | minnun cataimel Thevaram song lyrics in tamil

மின்னுஞ் சடைமேல் பாடல் வரிகள் (minnun cataimel) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் அரிசிற்கரைப்புத்தூர் – அழகாபுத்தூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : அரிசிற்கரைப்புத்தூர் – அழகாபுத்தூர்
சுவாமி : படிக்காசுவைத்த பரமர்
அம்பாள் : சிவாம்பிகை

மின்னுஞ் சடைமேல்

மின்னுஞ் சடைமேல் இளவெண்
திங்கள் விளங்கவே
துன்னுங் கடல்நஞ் சிருள்தோய்
கண்டர் தொன்மூதூர்
அன்னம் படியும் புனலார்
அரிசில் அலைகொண்டு
பொன்னும் மணியும் பொருதென்
கரைமேற் புத்தூரே. 1

மேவா அசுரர் மேவெயில்
வேவ மலைவில்லால்
ஏவார் எரிவெங் கணையா
லெய்தான் எய்துமூர்
நாவால் நாதன்
நாமம்ஓதி நாடோறும்
பூவால் நீராற் பூசுரர்
போற்றும் புத்தூரே. 2

பல்லார் தலைசேர் மாலை
சூடிப் பாம்பும்பூண்
டெல்லா விடமும் வெண்ணீ
றணிந்தோ ரேறேறிக்
கல்லார் மங்கை பங்க
ரேனுங் காணுங்கால்
பொல்லா ரல்லர் அழகியர்
புத்தூர்ப் புனிதரே. 3

வரியேர் வளையாள் அரிவை
யஞ்ச வருகின்ற
கரியேர் உரிவை போர்த்த
கடவுள் கருதுமூர்
அரியேர் கழனிப் பழனஞ்
சூழ்ந்தங்கழகாய
பொரியேர் புன்கு சொரிபூஞ்
சோலைப் புத்தூரே. 4

என்போ டரவம்
ஏனத்தெயிறோ டெழிலாமை
மின்போற்புரிநூல் விரவிப்பூண்ட
மணிமார்பர்
அன்போ டுருகும் அடியார்க்
கன்பர் அமருமூர்
பொன்போ தலர்கோங் கோங்கு
சோலைப் புத்தூரே 5

வள்ளி முலைதோய் குமரன்
தாதை வான்தோயும்
வெள்ளி மலைபோல் விடையொன்
றுடையான் மேவுமூர்
தெள்ளி வருநீர் அரிசில்
தென்பாற் சிறைவண்டும்
புள்ளும் மலிபூம் பொய்கை
சூழ்ந்த புத்தூரே. 6

நிலந்த ணீரோ டனல்கால்
விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கட் சோழ
னாகச் செய்தானூர்
அலந்த அடியான் அற்றைக்
கன்றோர் காசெய்திப்
புலர்ந்த காலை மாலை
போற்றும் புத்தூரே. 7

இத்தேர் ஏக இம்மலை
பேர்ப்பன் என்றேந்தும்
பத்தோர் வாயான் வரைக்கீழ்
அலறப் பாதந்தான்
வைத்தா ரருள்செய் வரதன்
மருவும் ஊரான
புத்தூர் காணப் புகுவார்
வினைகள் போகுமே. 8

முள்ளார் கமலத் தயன்மால்
முடியோ டடிதேட
ஒள்ளா ரெரியா யுணர்தற்
கரியான் ஊர்போலும்
கள்ளார் நெய்தல் கழுநீ
ராம்பல் கமலங்கள்
புள்ளார் பொய்கைப் பூப்பல
தோன்றும் புத்தூரே. 9

கையார்சோறு கவர்குண்
டர்களுந் துவருண்ட
மெய்யார் போர்வை
மண்டையர் சொல்லும்மெய்யல்ல
பொய்யா மொழியா
லந்தணர்போற்றும் புத்தூரில்
ஐயா என்பார்க் கையுற
வின்றி யழகாமே. 10

நறவங் கமழ்பூங் காழி
ஞான சம்பந்தன்
பொறிகொள் அரவம் பூண்டான்
ஆண்ட புத்தூர்மேல்
செறிவண் தமிழ்செய் மாலை
செப்ப வல்லார்கள்
அறவன் கழல்சேர்ந் தன்போ
டின்பம் அடைவாரே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment