மின்னியல் செஞ்சடைமேல் பாடல் வரிகள் (minniyal cencataimel) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் பாதாளீச்சுரம் – பாமணி தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : பாதாளீச்சுரம் – பாமணி
சுவாமி : சர்ப்பப்புரீஸ்வரர்
அம்பாள் : அமிர்தநாயகி

மின்னியல் செஞ்சடைமேல்

மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி
மத்தமொடு நல்ல
பொன்னியல் கொன்றையினான்
புனல்சூடிப் பொற்பமரும்
அன்னம் அனநடையாள் ஒருபாகத்
தமர்ந்தருளி நாளும்
பன்னிய பாடலினான்
உறைகோயில் பாதாளே. 1

நீடலர் கொன்றையொடு நிரம்பா
மதிசூடி வெள்ளைத்
தோடமர் காதில்நல்ல
குழையான் சுடுநீற்றான்
ஆடர வம்பெருக அனலேந்திக்
கைவீசி வேதம்
பாடலி னாலினியான்
உறைகோயில் பாதாளே. 2

நாகமும் வான்மதியும் நலம்மல்கு
செஞ்சடையான் சாமம்
போகநல் வில்வரையாற்
புரம்மூன் றெரித்துகந்தான்
தோகைநல் மாமயில்போல் வளர்சாயல்
தூமொழியைக் கூடப்
பாகமும் வைத்துகந்தான்
உறைகோயில் பாதாளே. 3

அங்கமும் நான்மறையு மருள்செய்
தழகார்ந்த அஞ்சொல்
மங்கையோர் கூறுடையான்
மறையோன் உறைகோயில்
செங்கயல் நின்றுகளுஞ் செறுவில்
திகழ்கின்ற சோதிப்
பங்கயம் நின்றலரும்
வயல்சூழ்ந்த பாதாளே. 4

பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங்
காகவுன்னி நின்று
தீயொடு மான்மறியும்
மழுவும் திகழ்வித்துத்
தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச்
சடைதன்மேற் சேரப்
பாய்புன லும்முடையான்
உறைகோயில் பாதாளே. 5

கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச்
சடைதன்மே னின்றும்
விண்ணியல் மாமதியு
முடன்வைத்தவன் விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்கா
டரங்காக ஆடும்
பண்ணியல் பாடலினான்
உறைகோயில் பாதாளே. 6

விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள
நாகம்வன்னி திகழ்
வண்டலர் கொன்றைநகு
மதிபுல்கு வார்சடையான்
விண்டவர் தம்புரம்மூன் றெரிசெய்
துரைவேதம் நான்குமவை
பண்டிசை பாடலினான்
உறைகோயில் பாதாளே. 7

மல்கிய நுண்ணிடையாள் உமைநங்கை
மறுகஅன்று கையால்
தொல்லை மலையெடுத்த
அரக்கன்றலை தோள்நெரித்தான்
கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள்
சடைக்க ணிந்தோன்
பல்லிசை பாடலினான்
உறைகோயில் பாதாளே. 8

தாமரை மேலயனும் அரியுந்தம
தாள்வினையாற் றேடிக்
காமனை வீடுவித்தான்
கழல்காண்பில ராயகன்றார்
பூமரு வுங்குழலாள் உமைநங்கை
பொருந்தியிட்ட நல்ல
பாமரு வுங்குணத்தான்
உறைகோயில் பாதாளே. 9

காலையில் உண்பவருஞ் சமண்கையருங்
கட்டுரைவிட் டன்று
ஆலவிடம் நுகர்ந்தான்
அவன்றன் அடியேபரவி
மாலையில் வண்டினங்கள் மதுவுண்
டிசைமுரல வாய்த்த
பாலையாழ்ப் பாட்டுகந்தான்
உறைகோயில் பாதாளே. 10

பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த
பாதாளைச் சேரப்
பொன்னியன் மாடமல்கு
புகலிந்நகர் மன்னன்
தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான
சம்பந்தன் சொன்ன
இன்னிசை பத்தும்வல்லார்
எழில்வானத் திருப்பாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment