மேவித்து நின்று பாடல் வரிகள் (mevittu ninru) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பழனம் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பழனம்
சுவாமி : ஆபத்சகாயர்
அம்பாள் : பெரியநாயகி
மேவித்து நின்று
மேவித்து நின்று விளைந்தன
வெந்துயர் துக்கமெல்லாம்
ஆவித்து நின்று கழிந்தன
அல்லல் அவையறுப்பான்
பாவித்த பாவனை நீயறி
வாய்பழ னத்தரசே
கூவித்துக் கொள்ளுந் தனையடி
யேனைக் குறிக்கொள்வதே. 1
சுற்றிநின் றார்புறங் காவ
லமரர் கடைத்தலையில்
மற்றுநின் றார்திரு மாலொடு
நான்முகன் வந்தடிக்கீழ்ப்
பற்றிநின் றார்பழ னத்தர
சேயுன் பணியறிவான்
உற்றுநின் றாரடி யேனைக்
குறிக்கொண் டருளுவதே. 2
ஆடிநின் றாயண்டம் ஏழுங்
கடந்துபோய் மேலவையுங்
கூடிநின் றாய்குவி மென்முலை
யாளையுங் கொண்டுடனே
பாடிநின் றாய்பழ னத்தர
சேயங்கொர் பால்மதியஞ்
சூடிநின் றாயடி யேனையஞ்
சாமைக் குறிக்கொள்வதே. 3
எரித்துவிட் டாய்அம்பி னாற்புர
மூன்றுமுன் னேபடவும்
உரித்துவிட் டாய்உமை யாள்நடுக்
கெய்தவொர் குஞ்சரத்தைப்
பரித்துவிட் டாய்பழ னத்தர
சேகங்கை வார்சடைமேற்
தரித்துவிட் டாயடி யேனைக்
குறிக்கொண் டருளுவதே. 4
முன்னியும் முன்னி முளைத்தன
மூவெயி லும்முடனே
மன்னியு மங்கும் இருந்தனை
மாய மனத்தவர்கள்
பன்னிய நூலின் பரிசறி
வாய்பழ னத்தரசே
உன்னியும் உன்னடி யேனைக்
குறிக்கொண் டருளுவதே. 5
ஏய்ந்தறுத் தாய்இன்ப னாய்இருந்
தேபடைத் தான்றலையைக்
காய்ந்தறுத் தாய்கண்ணி னாலன்று
காமனைக் காலனையும்
பாய்ந்தறுத் தாய்பழ னத்தர
சேயென் பழவினைநோய்
ஆய்ந்தறுத் தாயடி யேனைக்
குறிக்கொண் டருளுவதே. 6
மற்றுவைத் தாயங்கோர் மாலொரு
பாகம் மகிழ்ந்துடனே
உற்றுவைத் தாய்உமை யாளொடுங்
கூடும் பரிசெனவே
பற்றிவைத் தாய்பழ னத்தர
சேயங்கொர் பாம்பொருகை
சுற்றிவைத் தாய்அடி யேனைக்
குறிக்கொண் டருளுவதே. 7
ஊரினின் றாய்ஒன்றி நின்றுவிண்
டாரையும் ஒள்ளழலாற்
போரினின் றாய்பொறை யாயுயி
ராவி சுமந்துகொண்டு
பாரிநின் றாய்பழ னத்தர
சேபணி செய்பவர்கட்
காரநின் றாய்அடி யேனைக்
குறிக்கொண் டருளுவதே. 8
போகம்வைத் தாய்புரி புன்சடை
மேலொர் புனலதனை
ஆகம்வைத் தாய்மலை யான்மட
மங்கை மகிழ்ந்துடனே
பாகம்வைத் தாய்பழ னத்தர
சேயுன் பணியருளால்
ஆகம்வைத் தாய்அடி யேனைக்
குறிக்கொண் டருளுவதே. 9
அடுத்திருந் தாய்அரக் கன்முடி
வாயொடு தோள்நெரியக்
கெடுத்திருந் தாய்கிளர்ந் தார்வலி
யைக்கிளை யோடுடனே
படுத்திருந் தாய்பழ னத்தர
சேபுலி யின்னுரிதோல்
உடுத்திருந் தாய்அடி யேனைக்
குறிக்கொண் டருளுவதே.
திருச்சிற்றம்பலம்