மாதர்ப் பிறைக்கண்ணி பாடல் வரிகள் (matarp piraikkanni) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவையாறு தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவையாறு
சுவாமி : செம்பொற்சோதீசுவரர்
அம்பாள் : அறம்வளர்த்தநாயகி

மாதர்ப் பிறைக்கண்ணி

மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். 1

போழிளங் கண்ணியி னானைப்
பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றியென் றேத்தி
வட்டமிட் டாடா வருவேன்
ஆழி வலவனின் றேத்தும்
ஐயா றடைகின்ற போது
கோழி பெடையொடுங் கூடிக்
குளிர்ந்து வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். 2

எரிப்பிறைக் கண்ணியி னானை
யேந்திழை யாளொடும் பாடி
முரித்த இலயங்க ளிட்டு
முகமலர்ந் தாடா வருவேன்
அரித்தொழு கும்வெள் ளருவி
ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி
வைகி வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். 3

பிறையிளங் கண்ணியி னானைப்
பெய்வளை யாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித்
தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயி லாலும்
ஐயா றடைகின்ற போது
சிறையிளம் பேடையொ டாடிச்
சேவல் வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன் 4

ஏடு மதிக்கண்ணி யானை
ஏந்திழை யாளொடும் பாடிக்
காடொடு நாடு மலையுங்
கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற
ஐயா றடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடிப்
பிணைந்து வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். 5

தண்மதிக் கண்ணியி னானைத்
தையல்நல் லாளொடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி
உணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறை கின்ற
ஐயா றடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொ டாடி
வைகி வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். 6

கடிமதிக் கண்ணியி னானைக்
காரிகை யாளொடும் பாடி
வடிவொடு வண்ண மிரண்டும்
வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்குங் கழலான்
ஐயா றடைகின்ற போது
இடிகுர லன்னதொர் ஏனம்
இசைந்து வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். 7

விரும்பு மதிக்கண்ணி யானை
மெல்லிய லாளொடும் பாடிப்
பெரும்புலர் காலை யெழுந்து
பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி யுந்தும்
ஐயா றடைகின்ற போது
கருங்கலை பேடையொ டாடிக்
கலந்து வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். 8

முற்பிறைக் கண்ணியி னானை
மொய்குழ லாளொடும் பாடிப்
பற்றிக் கயிறறுக் கில்லேன்
பாடியும் ஆடா வருவேன்
அற்றருள் பெற்றுநின் றாரோ
டையா றடைகின்ற போது
நற்றுணைப் பேடையொ டாடி
நாரை வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். 9

திங்கள் மதிக்கண்ணி யானைத்
தேமொழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொ லெந்தை
எனக்கினி யென்னா வருவேன்
அங்கிள மங்கைய ராடும்
ஐயா றடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடிப்
பறந்து வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன். 10

வளர்மதிக் கண்ணியி னானை
வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததொர் காலங்
காண்பான் கடைக்கணிக் கின்றேன்
அளவு படாததோ ரன்போ
டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி
ஏறு வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன்.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
கயிலாயக் காட்சி தரிசனத்திற்கு

திருச்சிற்றம்பலம்

Leave a Comment