மடல்வரை யின்மது பாடல் வரிகள் (matalvarai yinmatu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கலிக்காமூர் – அன்னப்பன்பேட்டை தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்கலிக்காமூர் – அன்னப்பன்பேட்டை
சுவாமி : சுந்தரேசுவரர்
அம்பாள் : அழகுவனமுலையம்மை

மடல்வரை யின்மது

மடல்வரை யின்மது விம்முசோலை
வயல்சூழ்ந் தழகாருங்
கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ்
சொரியுங் கலிக்காமூர்
உடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய
வொருவன் கழலேத்த
இடர்தொட ராவினை யானசிந்தும்
இறைவன் னருளாமே. 1

மைவரை போற்றிரை யோடுகூடிப்
புடையே மலிந்தோதங்
கைவரை யால்வளர் சங்கமெங்கு
மிகுக்குங் கலிக்காமூர்
மெய்வரை யான்மகள் பாகன்தன்னை
விரும்ப உடல்வாழும்
ஐவரை யாசறுத் தாளுமென்பர்
அதுவுஞ் சரதமே. 2

தூவிய நீர்மல ரேந்திவையத்
தவர்கள் தொழுதேத்தக்
காவியின் நேர்விழி மாதரென்றுங்
கவினார் கலிக்காமூர்
மேவிய ஈசனை யெம்பிரானை
விரும்பி வழிபட்டால்
ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி
அமரர் பெருமானே. 3

குன்றுகள் போல்திரை உந்தியந்தண்
மணியார் தரமேதி
கன்றுடன் புல்கியா யம்மனைசூழ்
கவினார் கலிக்காமூர்
என்றுணர் ஊழியும் வாழுமெந்தை
பெருமான் அடியேத்தி
நின்றுணர் வாரை நினையகில்லார்
நீசர் நமன்தமரே. 4

வானிடை வாண்மதி மாடந்தீண்ட
மருங்கே கடலோதங்
கானிடை நீழலிற் கண்டல்வாழுங்
கழிசூழ் கலிக்காமூர்
ஆனிட யைந்துகந் தாடினானை
அமரர் தொழுதேத்த
நானடை வாம்வணம் அன்புதந்த
நலமே நினைவோமே. 5

துறைவளர் கேதகை மீதுவாசம்
சூழ்வான் மலிதென்றல்
கறைவள ருங்கட லோதமென்றுங்
கலிக்கும் கலிக்காமூர்
மறைவள ரும்பொரு ளாயினானை
மனத்தால் நினைந்தேத்த
நிறைவள ரும்புக ழெய்தும்வாதை
நினையா வினைபோமே. 6

கோலநன் மேனியின் மாதர்மைந்தர்
கொணர்மங் கிலியத்திற்
காலமும் பொய்க்கினுந் தாம்வழுவா
தியற்றுங் கலிக்காமூர்
ஞாலமுந் தீவளி ஞாயிறாய
நம்பன் கழலேத்தி
ஓலமி டாதவர் ஊழியென்று
உணர்வைத் துறந்தாரே. 7

ஊரர வந்தலை நீள்முடியான்
ஒலிநீர் உலகாண்டு
காரர வக்கடல் சூழவாழும்
பதியாங் கலிக்காமூர்
தேரர வல்குல்அம் பேதையஞ்சத்
திருந்து வரைபேர்த்தான்
ஆரர வம்பட வைத்தபாதம்
உடையான் இடமாமே. 8

அருவரை யேந்திய மாலும்மற்றை
அலர்மேல் உறைவானும்
இருவரும் அஞ்ச எரியுருவாய்
எழுந்தான் கலிக்காமூர்
ஒருவரை யான்மகள் பாகன்தன்னை
உணர்வால் தொழுதேத்தத்
திருமரு வுஞ்சிதை வில்லைச்செம்மைத்
தேசுண் டவர்பாலே. 9

மாசு பிறக்கிய மேனியாரும்
மருவுந் துவராடை
மீசு பிறக்கிய மெய்யினாரும்
அறியார் அவர்தோற்றங்
காசினி நீர்த்திரள் மண்டியெங்கும்
வளமார் கலிக்காமூர்
ஈசனை யெந்தைபி ரானையேத்தி
நினைவார் வினைபோமே. 10

ஆழியுள் நஞ்சமு தாரவுண்டன்
றமரர்க் கமுதுண்டு
ஊழிதொ றும்முள ராவளித்தான்
உலகத் துயர்கின்ற
காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன
தமிழாற் கலிக்காமூர்
வாழி யெம்மானை வணங்கியேத்த
மருவா பிணிதானே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment