மருவார் கொன்றை மதிசூடி பாடல் வரிகள் (maruvar konrai maticuti) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கடவூர் மயானம் – திருக்கடவூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருக்கடவூர் மயானம் – திருக்கடவூர்மருவார் கொன்றை மதிசூடி

மருவார் கொன்றை மதிசூடி
மாணிக் கத்தின் மலைபோல
வருவார் விடைமேல் மாதோடு
மகிழ்ந்து பூதப் படைசூழத்
திருமால் பிரமன் இந்திரற்குந்
தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே. 1

விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்
மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலர் நகுதலையர்
கால காலர் கடவூரர்
எண்ணார் புரமூன் றெரிசெய்த
இறைவ ருமையோ ரொருபாகம்
பெண்ணா ணாவர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே. 2

காயும் புலியின் அதளுடையர்
கண்டர் எண்டோட் கடவூரர்
தாயுந் தந்தை பல்லுயிர்க்குந்
தாமே யாய தலைவனார்
பாயும் விடையொன் றதுவேறிப்
பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே. 3

நறைசேர் மலரைங் கணையானை
நயனத் தீயாற் பொடிசெய்த
இறையா ராவர் எல்லார்க்கும்
இல்லை யென்னா தருள்செய்வார்
பறையார் முழவம் பாட்டோடு
பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப்
பிறையார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே. 4

கொத்தார் கொன்றை மதிசூடிக்
கோள்நா கங்கள் பூணாக
மத்த யானை உரிபோர்த்து
மருப்பும் ஆமைத் தாலியார்
பத்தி செய்து பாரிடங்கள்
பாடி ஆடப் பலிகொள்ளும்
பித்தர் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே. 5

துணிவார் கீளுங் கோவணமுந்
துதைந்து சுடலைப் பொடியணிந்து
பணிமே லிட்ட பாசுபதர்
பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்
திணிவார் குழையார் புரமூன்றுந்
தீவாய்ப் படுத்த சேவகனார்
பிணிவார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே. 6

காரார் கடலின் நஞ்சுண்ட
கண்டர் கடவூர் உறைவாணர்
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து
சிதைய விரலா லூன்றினார்
ஊர்தான் ஆவ துலகேழும்
உடையார்க் கொற்றி யூராரூர்
பேரா யிரவர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே. 7

வாடா முலையாள் தன்னோடும்
மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்
கோடார் கேழற் பின்சென்று
குறுகி விசயன் தவமழித்து
நாடா வண்ணஞ் செருச்செய்து
ஆவ நாழி நிலையருள்செய்
பீடார் சடையார் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே. 8

வேழம் உரிப்பர் மழுவாளர்
வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்
ஆழி அளிப்பர் அரிதனக்கன்
றானஞ் சுகப்பர் அறமுரைப்பர்
ஏழைத் தலைவர் கடவூரில்
இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழைச் சடையர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே. 9

மாட மல்கு கடவூரில்
மறையோ ரேத்தும் மயானத்துப்
பீடை தீர அடியாருக்
கருளும் பெருமா னடிகள்சீர்
நாடி நாவ லாரூரன்
நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடு மடியார் கேட்பார்மேற்
பாவ மான பறையுமே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment