மாறில் அவுணரரணம் பாடல் வரிகள் (maril avunararanam) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருஊறல் – தக்கோலம் தலம் தொண்டைநாடு நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : தொண்டைநாடு
தலம் : திருஊறல் – தக்கோலம்
சுவாமி : உமாபதீசுவரர்
அம்பாள் : உமையம்மை

மாறில் அவுணரரணம்

மாறில் அவுணரரணம் மவைமாயவோர்
வெங்கணையா லன்று
நீறெழ எய்தவெங்கள்
நிமலன் இடம்வினவில்
தேறல் இரும்பொழிலும் திகழ்செங்கயல்
பாய்வயலுஞ் சூழ்ந்த
ஊறல் அமர்ந்தபிரான்
ஒலியார்கழல் உள்குதுமே. 1

மத்த மதக்கரியை மலையான்மகள்
அஞ்சவன்று கையால்
மெத்த உரித்தவெங்கள்
விமலன் விரும்புமிடம்
தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர்
நீலம்நாளுந் நயனம்
ஒத்தல ருங்கழனித்
திருவூறலை உள்குதுமே. 2

ஏன மருப்பினொடும் எழிலாமையும்
பூண்டழகார் நன்றுங்
கானமர் மான்மறிக்
கைக்கடவுள் கருதுமிடம்
வான மதிதடவும் வளர்சோலைகள்
சூழ்ந்தழகார் நம்மை
ஊனம் அறுத்தபிரான்
திருவூறலை உள்குதுமே. 3

நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழு
வும்மனலும் அன்று
கையணி கொள்கையினான்
கடவுள் ளிடம்வினவின்
மையணி கண்மடவார் பலர்வந்
திறைஞ்சமன்னி நம்மை
உய்யும் வகைபுரிந்தான்
திருவூறலை உள்குதுமே. 4

எண்டிசை யோர்மகிழ எழில்மாலையும்
போனகமும் பண்டு
சண்டி தொழவளித்தான்
அவன்றாழும் இடம்வினவில்
கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கை
கள்சூழ்ந்து நஞ்சை
உண்டபி ரானமருந்
திருவூறலை உள்குதுமே. 5

இப்பதிகத்தில் 6-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 6

கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந்
தெய்துதலுங் கலங்கி
மறுக்குறும் மாணிக்கருள
மகிழ்ந்தானிடம் வினவில்
செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளும்
மெய்யுந்நெரிய அன்று
ஒறுத்தருள் செய்தபிரான்
திருவூறலை உள்குதுமே. 7

நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான்
முகனும்மறியா தன்று
தேரும் வகைநிமிர்ந்தான்
அவன்சேரும் இடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வந்
திறைஞ்சமகிழ்ந் தாகம்
ஊரும் அரவசைத்தான்
திருவூறலை உள்குதுமே. 8

பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர்
மோட்டமணர் குண்டர்
என்னும் இவர்க்கருளா
ஈசன் இடம்வினவில்
தென்னென வண்டினங்கள் செறியார்பொழில்
சூழ்ந்தழகார் தன்னை
உன்னவினை கெடுப்பான்
திருவூறலை உள்குதுமே. 9

கோட லிரும்புறவிற் கொடிமாடக்
கொச்சையர்மன் மெச்ச
ஓடுபுனல் சடைமேற்
கரந்தான் திருவூறல்
நாட லரும்புகழான் மிகுஞானசம்
பந்தன்சொன்ன நல்ல
பாடல்கள் பத்தும்வல்லார்
பரலோகத்து இருப்பாரே.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. தக்கோலமென வழங்குகின்றது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment