மறைகள் ஆயின நான்கும் பாடல் வரிகள் (maraikal ayina nankum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவானைக்கா – திருவானைக்கோவில் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவானைக்கா – திருவானைக்கோவில்மறைகள் ஆயின நான்கும்

மறைகள் ஆயின நான்கும்
மற்றுள பொருள்களு மெல்லாந்
துறையுந் தோத்திரத் திறையுந்
தொன்மையும் நன்மையு மாய
அறையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இறைவன் என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே. 1

வங்கம் மேவிய வேலை
நஞ்செழ வஞ்சர்கள் கூடித்
தங்கள் மேல்அட ராமை
உண்ணென உண்டிருள் கண்டன்
அங்கம் ஓதிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எங்கள் ஈசனென் பார்கள்
எம்மையும் ஆளுடை யாரே. 2

நீல வண்டறை கொன்றை
நேரிழை மங்கையோர் திங்கள்
சால வாளர வங்கள்
தங்கிய செஞ்சடை எந்தை
ஆல நீழலுள் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
ஏலு மாறுவல் லார்கள்
எம்மையும் ஆளுடை யாரே. 3

தந்தை தாயுல குக்கோர்
தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்
பந்த மாயின பெருமான்
பரிசுடை யவர்திரு வடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எந்தை என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே. 4

கணைசெந் தீயர வந்நாண்
கல்வளை யுஞ்சிலை யாகத்
துணைசெய் மும்மதில் மூன்றுஞ்
சுட்டவ னேயுல குய்ய
அணையும் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இணைகொள் சேவடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே. 5

விண்ணின் மாமதி சூடி
விலையிலி கலன்அணி விமலன்
பண்ணின் நேர்மொழி மங்கை
பங்கினன் பசுவுகந் தேறி
அண்ண லாகிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எண்ணு மாறுவல் லார்கள்
எம்மையும் ஆளுடை யாரே. 6

தார மாகிய பொன்னித்
தண்டுறை ஆடி விழுத்தும்
நீரில் நின்றடி போற்றி
நின்மலா கொள்ளென ஆங்கே
ஆரங் கொண்டவெம் மானைக்
காவுடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும்
எம்மையும் ஆளுடை யாரே. 7

உரவம் உள்ளதோர் உழையின்
உரிபுலி அதளுடை யானை
விரைகொள் கொன்றையி னானை
விரிசடை மேற்பிறை யானை
அரவம் வீக்கிய ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இரவும் எல்லியும் பகலும்
ஏத்துவார் எமையுடை யாரே. 8

வலங்கொள் வாரவர் தங்கள்
வல்வினை தீர்க்கும் மருந்து
கலங்கக் காலனைக் காலாற்
காமனைக் கண்சிவப் பானை
அலங்கல் நீர்பொரும் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
இலங்கு சேவடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே. 9

ஆழி யாற்கருள் ஆனைக்
காவுடை ஆதிபொன் னடியின்
நீழ லேசர ணாக
நின்றருள் கூர நினைந்து
வாழ வல்லவன் றொண்டன்
வண்டமிழ் மாலைவல் லார்போய்
ஏழு மாபிறப் பற்று
எம்மையும் ஆளுடை யாரே. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment