மண்ணின்நல் லவண்ணம் பாடல் வரிகள் (manninnal lavannam) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கழுமலம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருக்கழுமலம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

மண்ணின்நல் லவண்ணம்

மண்ணின்நல் லவண்ணம்
வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி
யாதுமோர் குறைவிலைக்
கண்ணின்நல் லஃதுறுங்
கழுமல வளநகர்ப்
பெண்ணின்நல் லாளொடும்
பெருந்தகை யிருந்ததே. 1

போதையார் பொற்கிண்ணத்
தடிசில்பொல் லாதெனத்
தாதையார் முனிவுறத்
தானெனை யாண்டவன்
காதையார் குழையினன்
கழுமல வளநகர்ப்
பேதையா ளவளொடும்
பெருந்தகை யிருந்ததே. 2

தொண்டணை செய்தொழில்
துயரறுத் துய்யலாம்
வண்டணை கொன்றையான்
மதுமலர்ச் சடைமுடிக்
கண்டுணை நெற்றியான்
கழுமல வளநகர்ப்
பெண்டுணை யாகவோர்
பெருந்தகை யிருந்ததே. 3

அயர்வுளோம் என்றுநீ
அசைவொழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள்
நேரிழை யவளொடுங்
கயல்வயல் குதிகொளுங்
கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெயப்
பெருந்தகை யிருந்ததே. 4

அடைவிலோம் என்றுநீ
அயர்வொழி நெஞ்சமே
விடையமர் கொடியினான்
விண்ணவர் தொழுதெழுங்
கடையுயர் மாடமார்
கழுமல வளநகர்ப்
பெடைநடை யவளொடும்
பெருந்தகை யிருந்ததே. 5

மற்றொரு பற்றிலை
நெஞ்சமே மறைபல
கற்றநல் வேதியர்
கழுமல வளநகர்ச்
சிற்றிடைப் பேரல்குல்
திருந்திழை யவளொடும்
பெற்றெனை யாளுடைப்
பெருந்தகை யிருந்ததே. 6

குறைவளை வதுமொழி
குறைவொழி நெஞ்சமே
நிறைவளை முன்கையாள்
நேரிழை யவளொடுங்
கறைவளர் பொழிலணி
கழுமல வளநகர்ப்
பிறைவளர் சடைமுடிப்
பெருந்தகை யிருந்ததே. 7

அரக்கனார் அருவரை
யெடுத்தவன் அலறிட
நெருக்கினார் விரலினால்
நீடியாழ் பாடவே
கருக்குவாள் அருள்செய்தான்
கழுமல வளநகர்ப்
பெருக்குநீ ரவளொடும்
பெருந்தகை யிருந்ததே. 8

நெடியவன் பிரமனும்
நினைப்பரி தாயவர்
அடியொடு முடியறி
யாவழல் உருவினன்
கடிகமழ் பொழிலணி
கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும்
பெருந்தகை யிருந்ததே. 9

தாருறு தட்டுடைச்
சமணர்சாக் கியர்கள்தம்
ஆருறு சொற்களைந்
தடியிணை யடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர்
கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும்
பெருந்தகை யிருந்ததே. 10

கருந்தடந் தேன்மல்கு
கழுமல வளநகர்ப்
பெருந்தடங் கொங்கையோ
டிருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம்
பந்தன செந்தமிழ்
விரும்புவா ரவர்கள்போய்
விண்ணுல காள்வரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment