மலைக்கொ ளானை பாடல் வரிகள் (malaikko lanai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருக்கடவூர் வீரட்டம் – திருக்கடவூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருக்கடவூர் வீரட்டம் – திருக்கடவூர்
சுவாமி : அமிர்தகடேசுவரர்
அம்பாள் : அபிராமியம்மை

மலைக்கொ ளானை

மலைக்கொ ளானை
மயக்கிய வல்வினை
நிலைக்கொ ளானை
நினைப்புறு நெஞ்சமே
கொலைக்கை யானையுங்
கொன்றிடு மாதலாற்
கலைக்கை யானைகண்
டீர்கட வூரரே. 1

வெள்ளி மால்வரை
போல்வதோ ரானையார்
உள்ள வாறெனை
உள்புகு மானையார்
கொள்ள மாகிய
கோயிலு ளானையார்
கள்ள வானைகண்
டீர்கட வூரரே. 2

ஞான மாகிய
நன்குண ரானையார்
ஊனை வேவ
வுருக்கிய ஆனையார்
வேன லானை
யுரித்துமை அஞ்சவே
கான லானைகண்
டீர்கட வூரரே. 3

ஆல முண்டழ
காயதோ ரானையார்
நீல மேனி
நெடும்பளிங் கானையார்
கோல மாய
கொழுஞ்சுட ரானையார்
கால வானைகண்
டீர்கட வூரரே. 4

அளித்த ஆனஞ்சு
மாடிய வானையார்
வெளுத்த நீள்கொடி
யேறுடை யானையார்
எளித்த வேழத்தை
எள்குவித் தானையார்
களித்த வானைகண்
டீர்கட வூரரே. 5

விடுத்த மால்வரை
விண்ணுற வானையார்
தொடுத்த மால்வரை
தூயதோ ரானையார்
கடுத்த காலனைக்
காய்ந்ததோ ரானையார்
கடுத்த வானைகண்
டீர்கட வூரரே. 6

மண்ணு ளாரை
மயக்குறு மானையார்
எண்ணு ளார்பல
ரேத்திடு மானையார்
விண்ணு ளார்பல
ரும்மறி யானையார்
கண்ணு ளானைகண்
டீர்கட வூரரே. 7

சினக்குஞ் செம்பவ
ளத்திர ளானையார்
மனக்கும் வல்வினை
தீர்த்திடு மானையார்
அனைக்கும் அன்புடை
யார்மனத் தானையார்
கனைக்கு மானைகண்
டீர்கட வூரரே. 8

வேத மாகிய
வெஞ்சுட ரானையார்
நீதி யானில
னாகிய வானையார்
ஓதி யூழி
தெரிந்துண ரானையார்
காத லானைகண்
டீர்கட வூரரே. 9

நீண்ட மாலொடு
நான்முகன் றானுமாய்க்
காண்டு மென்றுபுக்
கார்க ளிருவரும்
மாண்ட வாரழ
லாகிய வானையார்
காண்ட லானைகண்
டீர்கட வூரரே. 10

அடுத்து வந்த
இலங்கையர் மன்னனை
எடுத்த தோள்கள்
இறநெரித் தானையார்
கடுத்த காலனைக்
காய்ந்ததோ ரானையார்
கடுக்கை யானைகண்
டீர்கட வூரரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment