குண்டனாய்ச் சமண பாடல் வரிகள் (kuntanayc camana) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவையாறு தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவையாறு
சுவாமி : செம்பொற்சோதீசுவரர்
அம்பாள் : அறம்வளர்த்தநாயகி

குண்டனாய்ச் சமண

குண்டனாய்ச் சமண ரோடே
கூடிநான் கொண்ட மாலைத்
துண்டனே சுடர்கொள் சோதீ
தூநெறி யாகி நின்ற
அண்டனே அமரர் ஏறே
திருவையா றமர்ந்த தேனே
தொண்டனேன் தொழுதுன் பாதஞ்
சொல்லிநான் திரிகின் றேனே. 1

பீலிகை இடுக்கி நாளும்
பெரியதோர் தவமென் றெண்ணி
வாலிய தறிகள் போல
மதியிலார் பட்ட தென்னே
வாலியார் வணங்கி ஏத்துந்
திருவையா றமர்ந்த தேனோ
டாலியா எழுந்த நெஞ்சம்
அழகிதா எழுந்த வாறே. 2

தட்டிடு சமண ரோடே
தருக்கிநான் தவமென் றெண்ணி
ஒட்டிடு மனத்தி னீரே
உம்மையான் செய்வ தென்னே
மொட்டிடு கமலப் பொய்கைத்
திருவையா றமர்ந்த தேனோ
டொட்டிடும் உள்ளத் தீரே
உம்மைநான் உகந்திட் டேனே. 3

பாசிப்பல் மாசு மெய்யர்
பலமிலாச் சமண ரோடு
நேசத்தா லிருந்த நெஞ்சை
நீக்குமா றறிய மாட்டேன்
தேசத்தார் பரவி யேத்துந்
திருவையா றமர்ந்த தேனை
வாசத்தால் வணங்க வல்லார்
வல்வினை மாயு மன்றே. 4

கடுப்பொடி யட்டி மெய்யிற்
கருதியோர் தவமென் றெண்ணி
வடுக்களோ டிசைந்த நெஞ்சே
மதியிலி பட்ட தென்னே
மடுக்களில் வாளை பாயுந்
திருவையா றமர்ந்த தேனை
அடுத்துநின் றுன்னு நெஞ்சே
அருந்தவஞ் செய்த வாறே. 5

துறவியென் றவம தோரேன்
சொல்லிய செலவு செய்து
உறவினால் அமண ரோடும்
உணர்விலேன் உணர்வொன் றின்றி
நறவமார் பொழில்கள் சூழ்ந்த
திருவையா றமர்ந்த தேனை
மறவிலா நெஞ்ச மேநன்
மதியுனக் கடைந்த வாறே. 6

பல்லுரைச் சமண ரோடே
பலபல கால மெல்லாஞ்
சொல்லிய செலவு செய்தேன்
சோர்வனான் நினைந்த போது
மல்லிகை மலருஞ் சோலைத்
திருவையா றமர்ந்த தேனை
எல்லியும் பகலு மெல்லாம்
நினைந்தபோ தினிய வாறே. 7

மண்ணுளார் விண்ணு ளாரும்
வணங்குவார் பாவம் போக
எண்ணிலாச் சமண ரோடே
இசைந்தனை ஏழை நெஞ்சே
தெண்ணிலா எறிக்குஞ் சென்னித்
திருவையா றமர்ந்த தேனைக்
கண்ணினாற் காணப் பெற்றுக்
கருதிற்றே முடிந்த வாறே. 8

குருந்தம தொசித்த மாலுங்
குலமலர் மேவி னானுந்
திருந்துநற் றிருவ டியுந்
திருமுடி காண மாட்டார்
அருந்தவ முனிவ ரேத்துந்
திருவையா றமர்ந்த தேனைப்
பொருந்திநின் றுன்னு நெஞ்சே
பொய்வினை மாயு மன்றே. 9

அறிவிலா அரக்க னோடி
அருவரை எடுக்க லுற்று
முறுகினான் முறுகக் கண்டு
மூதறி வாளன் நோக்கி
நிறுவினான் சிறுவி ரலால்
நெரிந்துபோய் நிலத்தில் வீழ
அறிவினால் அருள்கள் செய்தான்
திருவையா றமர்ந்த தேனே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment