Sivan Songs

கோத்திட்டையுங் கோவலும் பாடல் வரிகள் | kottittaiyun kovalum Thevaram song lyrics in tamil

கோத்திட்டையுங் கோவலும் பாடல் வரிகள் (kottittaiyun kovalum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பரங்குன்றம் தலம் பாண்டியநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : பாண்டியநாடு
தலம் : திருப்பரங்குன்றம்கோத்திட்டையுங் கோவலும்

கோத்திட்டையுங் கோவலும் கோயில்கொண் டீர்உமைக்
கொண்டுழல் கின்றதோர் கொல்லைச் சில்லைச்
சேத்திட்டுக் குத்தித் தெருவே திரியுஞ்
சில்பூத மும்நீ ரும்திசை திசையன
சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழநும்
அரைக்கோ வணத்தோ டொருதோல் புடைசூழ்ந்
தார்த்திட்ட தும்பாம்பு கைக்கொண்ட தும்பாம்
படிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. 1

முண்டந் தரித்தீர் முதுகா டுறைவீர்
முழுநீறு மெய்பூசு திர்மூக்கப் பாம்பைக்
கண்டத்தி லும்தோளி லும்கட்டி வைத்தீர்
கடலைக் கடைந்திட்ட தோர்நஞ்சை உண்டீர்
பிண்டஞ் சுமந்தும் மொடும்கூட மாட்டோம்
பெரியா ரொடுநட் பினிதென் றிருத்தும்
அண்டம் கடந்தப் புறத்தும் இருந்தீர்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. 2

மூடாய முயலகன் மூக்கப் பாம்பு
முடைநா றியவெண் தலைமொய்த்த பல்பேய்
பாடா வருபூதங் கள்பாய் புலித்தோல்
பரிசொன் றறியா தனபா ரிடங்கள்
தோடார் மலர்க்கொன் றையும்துன் னெருக்கும்
துணைமா மணிநா கம்அரைக் கசைத்தொன்
றாடா தனவேசெய் தீர்எம் பெருமான்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. 3

மஞ்சுண்ட மாலை மதிசூடு சென்னி
மலையான் மடந்தை மணவாள நம்பி
பஞ்சுண்ட அல்குல் பணைமென் முலையா
ளொடுநீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர்
நஞ்சுண்டு தேவர்க் கமுதம் கொடுத்த
நலம்ஒன் றறியோம் உங்கைநா கமதற்
கஞ்சுண் டுபடம் அதுபோ கவிடீர்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. 4

பொல்லாப் புறங்காட் டகத்தாட் டொழியீர்
புலால்வா யனபே யொடுபூச் சொழியீர்
எல்லாம் அறிவீர் இதுவே அறியீர்
என்றிரங் குவேன்எல் லியும்நண் பகலும்
கல்லால் நிழற்கீழ் ஒருநாட்கண் டதும்
கடம்பூர்க் கரக்கோயி லின்முன்கண் டதும்
அல்லால் விரகொன் றிலம்எம் பெருமான்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. 5

தென்னாத் தெனாத்தெத் தெனாஎன்று பாடிச்
சில்பூ தமும்நீ ரும்திசை திசையன
பன்னான் மறைபா டுதிர்பா சூர்உளீர்
படம்பக்கம் கொட்டுந் திருவொற்றி யூரீர்
பண்ணார் மொழியாளை யோர்பங் குடையீர்
படுகாட் டகத்தென்று மோர்பற் றொழியீர்
அண்ணா மலையேன் என்றீர் ஆரூருளீர்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. 6

சிங்கத் துரிமூடு திர்தே வர்கணம்
தொழநிற்றீர் பெற்றம் உகந்தே றிடுதிர்
பங்கம் பலபே சிடப்பா டும்தொண்டர்
தமைப்பற்றிக் கொண்டாண்டு விடவுங் கில்லீர்
கங்கைச் சடையீர் உம்கருத் தறியோம்
கண்ணுமூன் றுடையீர் கண்ணேயாய் இருந்தால்
அங்கத் துறுநோய் களைந்தாள கில்லீர்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. 7

பிணிவண் ணத்தவல் வினைதீர்த் தருளீர்
பெருங்காட் டகத்திற் பெரும்பேயும் நீரும்
துணிவண் ணத்தின்மேலும் ஓர்தோல் உடுத்துச்
சுற்றும்நா கத்தராய்ச் சுண்ணநீறு பூசி
மணிவண்ணத் தின்மேலும் ஓர்வண்ணத் தராய்
மற்றுமற் றும்பல் பலவண் ணத்தராய்
அணிவண் ணத்தராய் நிற்றீர்எம் பெருமான்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. 8

கோளா ளியகுஞ் சரங்கோள் இழைத்தீர்
மலையின் தலைஅல் லதுகோ யில்கொள்ளீர்
வேளா ளியகா மனைவெந் தழிய
விழித்தீர் அதுவன் றியும்வேய் புரையும்
தோளாள் உமைநங்கை யொர்பங் குடையீர்
உடுகூறை யுஞ்சோறும் தந்தாள கில்லீர்
ஆளா ளியவே கிற்றீர்எம் பெருமான்
அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதுமே. 9

பாரோடு விண்ணும் பகலும் ஆகிப்
பனிமால் வரைஆ கிப்பரவை ஆகி
நீரோ டுதீயும் நெடுங்காற் றும்ஆகி
நெடுவெள் ளிடையாகி நிலனு மாகித்
தேரோ டவரை எடுத்த அரக்கன்
சிரம்பத் திறுத்தீர் உமசெய்கை எல்லாம்
ஆரோடுங் கூடா அடிகேள் இதுவென்
அடியோம் உமக்காட் செயஅஞ் சுதுமே. 10

அடிகேள் உமக்காட் செயஅஞ் சுதும்என்
றமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே
மொழிந்தாறு மோர்நான்கு மோரொன் றினையும்
படியா இவைகற் றுவல்ல அடியார்
பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே
குடியாகி வானோர்க்கும் ஓர்கோவும் ஆகிக்
குலவேந்த ராய்விண் முழுதாள் பவரே. 11

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment