கொடியுடை மும்மதி பாடல் வரிகள் (kotiyutai mum mati) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவலம்புரம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவலம்புரம்
சுவாமி : வலம்புரநாதர்
அம்பாள் : வடுவகிர்க்கணம்மை

கொடியுடை மும்மதி

கொடியுடை மும்மதி லூடுருவக்
குனிவெஞ் சிலைதாங்கி
இடிபட எய்த அமரர்பிரான்
அடியார் இசைந்தேத்தத்
துடியிடை யாளையொர் பாகமாகத்
துதைந்தா ரிடம்போலும்
வடிவுடை மேதி வயல்படியும்
வலம்புர நன்னகரே. 1

கோத்தகல் லாடையுங் கோவணமுங்
கொடுகொட்டி கொண்டொருகைத்
தேய்த்தன் றனங்கனைத் தேசழித்துத்
திசையார் தொழுதேத்தக்
காய்த்தகல் லாலதன் கீழிருந்த
கடவுள் ளிடம்போலும்
வாய்த்தமுத் தீத்தொழில் நான்மறையோர்
வலம்புர நன்னகரே. 2

நொய்யதொர் மான்மறி கைவிரலின்
நுனைமேல் நிலையாக்கி
மெய்யெரி மேனிவெண் ணீறுபூசி
விரிபுன் சடைதாழ
மையிருஞ் சோலை மணங்கமழ
இருந்தா ரிடம்போலும்
வைகலும் மாமுழ வம்மதிரும்
வலம்புர நன்னகரே. 3

ஊனம ராக்கை யுடம்புதன்னை
யுணரிற் பொருளன்று
தேனமர் கொன்றையி னானடிக்கே
சிறுகாலை யேத்துமினோ
ஆனமர் ஐந்துங்கொண் டாட்டுகந்த
அடிகள் இடம்போலும்
வானவர் நாடொறும் வந்திறைஞ்சும்
வலம்புர நன்னகரே. 4

செற்றெறி யுந்திரை யார்கலுழிச்
செழுநீர்கிளர் செஞ்சடைமேல்
அற்றறி யாதன லாடுநட்ட
மணியார் தடங்கண்ணி
பெற்றறி வார்எரு தேறவல்ல
பெருமான் இடம்போலும்
வற்றறி யாப்புனல் வாய்ப்புடைய
வலம்புர நன்னகரே. 5

உண்ணவண் ணத்தொளி நஞ்சமுண்டு
வுமையோ டுடனாகிச்
சுண்ணவண் ணப்பொடி மேனிபூசிச்
சுடர்ச்சோதி நின்றிலங்கப்
பண்ணவண் ணத்தன பாணிசெய்யப்
பயின்றா ரிடம்போலும்
வண்ணவண் ணப்பறை பாணியறா
வலம்புர நன்னகரே. 6

புரிதரு புன்சடை பொன்தயங்கப்
புரிநூல் புரண்டிலங்க
விரைதரு வேழத்தின் ஈருரிதோல்
மேல்மூடி வேய்புரைதோள்
அரைதரு பூந்துகில் ஆரணங்கை
யமர்ந்தா ரிடம்போலும்
வரைதரு தொல்புகழ் வாழ்க்கையறா
வலம்புர நன்னகரே. 7

தண்டணை தோளிரு பத்தினொடுந்
தலைபத் துடையானை
ஒண்டணை மாதுமை தான்நடுங்க
ஒருகால் விரலூன்றி
மிண்டது தீர்த்தருள் செய்யவல்ல
விகிர்தர்க் கிடம்போலும்
வண்டணை தன்னொடு வைகுபொழில்
வலம்புர நன்னகரே. 8

தாருறு தாமரை மேலயனுந்
தரணி யளந்தானும்
தேர்வறி யாவகை யால்இகலித்
திகைத்துத் திரிந்தேத்தப்
பேர்வறி யாவகை யால்நிமிர்ந்த
பெருமான் இடம்போலும்
வாருறு சோலை மணங்கமழும்
வலம்புர நன்னகரே. 9

காவிய நல்துவ ராடையினார் கடுநோன்பு
மேல்கொள்ளும்
பாவிகள் சொல்லைப் பயின்றறியாப்
பழந்தொண்டர் உள்ளுருக
ஆவியுள் நின்றருள் செய்யவல்ல
அழகர் இடம்போலும்
வாவியின் நீர்வயல் வாய்ப்புடைய
வலம்புர நன்னகரே. 10

நல்லியல் நான்மறை யோர்புகலித்
தமிழ்ஞான சம்பந்தன்
வல்லியந் தோலுடை யாடையினான்
வலம்புர நன்னகரைச்
சொல்லிய பாடல்கள் பத்துஞ்சொல்ல
வல்லவர் தொல்வினைபோய்ச்
செல்வன சேவடி சென்றணுகிச்
சிவலோகஞ் சேர்வாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment