கற்றவர்க ளுண்ணுங் பாடல் வரிகள் (karravarka lunnun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவாரூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவாரூர்கற்றவர்க ளுண்ணுங்

கற்றவர்க ளுண்ணுங் கனியே போற்றி
கழலடைந்தார் செல்லுங் கதியே போற்றி
அற்றவர்கட் காரமுத மானாய் போற்றி
அல்லலறுத் தடியேனை ஆண்டாய் போற்றி
மற்றொருவ ரொப்பில்லா மைந்தா போற்றி
வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்தம் புரமெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி. 1

வங்கமலி கடல்நஞ்ச முண்டாய் போற்றி
மதயானை ஈருரிவை போர்த்தாய் போற்றி
கொங்கலரும் நறுங்கொன்றைத் தாராய் போற்றி
கொல்புலித்தோ லாடைக் குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்தம் இறைவா போற்றி
ஆலமர நீழலறஞ் சொன்னாய் போற்றி
செங்கனகத் தனிக்குன்றே சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி. 2

மலையான் மடந்தை மணாளா போற்றி
மழவிடையாய் நின்பாதம் போற்றி போற்றி
நிலையாக என்னெஞ்சில் நின்றாய் போற்றி
நெற்றிமே லொற்றைக்கண் ணுடையாய் போற்றி
இலையார்ந்த மூவிலைவே லேந்தீ போற்றி
ஏழ்கடலு மேழ்பொழிலு மானாய் போற்றி
சிலையாலன் றெயிலெரித்த சிவனே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி. 3

பொன்னியலும் மேனியனே போற்றி போற்றி
பூதப் படையுடையாய் போற்றி போற்றி
மன்னியசீர் மறைநான்கு மானாய் போற்றி
மறியேந்து கையானே போற்றி போற்றி
உன்னுமவர்க் குண்மையனே போற்றி போற்றி
உலகுக் கொருவனே போற்றி போற்றி
சென்னிமிசை வெண்பிறையாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி. 4

நஞ்சுடைய கண்டனே போற்றி போற்றி
நற்றவனே நின்பாதம் போற்றி போற்றி
வெஞ்சுடரோன் பல்லிறுத்த வேந்தே போற்றி
வெண்மதியங் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சிருளி லாட லுகந்தாய் போற்றி
தூநீறு மெய்க்கணிந்த சோதீ போற்றி
செஞ்சடையாய் நின்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி. 5

சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி
பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி
அங்கமலத் தயனோடு மாலுங் காணா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி
செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி. 6

வம்புலவு கொன்றைச் சடையாய் போற்றி
வான்பிறையும் வாளரவும் வைத்தாய் போற்றி
கொம்பனைய நுண்ணிடையாள் கூறா போற்றி
குரைகழலாற் கூற்றுதைத்த கோவே போற்றி
நம்புமவர்க் கரும்பொருளே போற்றி போற்றி
நால்வேத மாறங்க மானாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி. 7

உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி
உகப்பார் மனத்தென்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி
வானவர்கோன் தோள்துணித்த மைந்தா போற்றி
வெள்ளையே றேறும் விகிர்தா போற்றி
மேலோர்க்கு மேலோர்க்கு மேலாய் போற்றி
தெள்ளுநீர்க் கங்கைச் சடையாய் போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி. 8

பூவார்ந்த சென்னிப் புனிதா போற்றி
புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தேவார்ந்த தேவர்க்குந் தேவே போற்றி
திருமாலுக் காழி யளித்தாய் போற்றி
சாவாமே காத்தென்னை யாண்டாய் போற்றி
சங்கொத்த நீற்றெஞ் சதுரா போற்றி
சேவார்ந்த வெல்கொடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி. 9

பிரமன்றன் சிரமரிந்த பெரியோய் போற்றி
பெண்ணுருவோ டாணுருவாய் நின்றாய் போற்றி
கரநான்கும் முக்கண்ணு முடையாய் போற்றி
காதலிப்பார்க் காற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க் கரசே போற்றி
அன்றரக்கன் ஐந்நான்கு தோளுந் தாளுஞ்
சிரம்நெரித்த சேவடியாய் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி. 10

திருச்சிற்றம்பலம்

Leave a Comment