கரப்பர் கால பாடல் வரிகள் (karappar kala) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பராய்துறை – திருப்பரைதுரை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருப்பராய்துறை – திருப்பரைதுரை
சுவாமி : திருப்பராய்த்துறைநாதர்
அம்பாள் : பசும்பொன்மயிலம்மை
கரப்பர் கால
கரப்பர் கால
மடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல்
லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு
காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை
மேவிய செல்வரே. 1
மூடி னார்களி
யானையின் ஈருரி
பாடி னார்மறை
நான்கினோ டாறங்கஞ்
சேட னார்தென்
பராய்த்துறைச் செல்வரைத்
தேடிக் கொண்டடி
யேன்சென்று காண்பனே. 2
பட்ட நெற்றியர்
பால்மதிக் கீற்றினர்
நட்ட மாடுவர்
நள்ளிருள் ஏமமுஞ்
சிட்ட னார்தென்
பராய்த்துறைச் செல்வனார்
இட்ட மாயிருப்
பாரை அறிவரே. 3
முன்பெ லாஞ்சில
மோழைமை பேசுவர்
என்பெ லாம்பல
பூண்டங் குழிதர்வர்
தென்ப ராய்த்துறை
மேவிய செல்வனார்
அன்ப ராயிருப்
பாரை அறிவரே. 4
போது தாதொடு
கொண்டு புனைந்துடன்
தாத விழ்சடைச்
சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்கவென்
றேத்திப் பராய்த்துறைச்
சோதி யானைத்
தொழுதெழுந் துய்ம்மினே. 5
நல்ல நான்மறை
யோதிய நம்பனைப்
பல்லில் வெண்டலை
யிற்பலி கொள்வனைத்
தில்லை யான்றென்
பராய்த்துறைச் செல்வனை
வல்லை யாய்வணங்
கித்தொழு வாய்மையே. 6
நெருப்பி னாற்குவித்
தாலொக்கு நீள்சடைப்
பருப்ப தம்மத
யானை யுரித்தவன்
திருப்ப ராய்த்துறை
யார்திரு மார்பின்நூல்
பொருப்ப ராவி
இழிபுனல் போன்றதே. 7
எட்ட விட்ட
இடுமண லெக்கர்மேற்
பட்ட நுண்டுளி
பாயும் பராய்த்துறைச்
சிட்டன் சேவடி
சென்றடை கிற்றிரேல்
விட்டு நம்வினை
யுள்ளன வீடுமே. 8
நெருப்ப ராய்நிமிர்ந்
தாலொக்கு நீள்சடை
மருப்ப ராய்வளைத்
தாலொக்கும் வாண்மதி
திருப்ப ராய்த்துறை
மேவிய செல்வனார்
விருப்ப ராயிருப்
பாரை அறிவரே. 9
தொண்டு பாடியுந்
தூமலர் தூவியும்
இண்டை கட்டி
இணையடி யேத்தியும்
பண்ட ரங்கர்
பராய்த்துறைப் பாங்கரைக்
கண்டு கொண்டடி
யேனுய்ந்து போவனே. 10
அரக்கன் ஆற்றல்
அழித்த அழகனைப்
பரக்கு நீர்ப்பொன்னி
மன்னு பராய்த்துறை
இருக்கை மேவிய
ஈசனை யேத்துமின்
பொருக்க நும்வினை
போயறுங் காண்மினே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
திருச்சிற்றம்பலம்