கங்கையைச் சடையுள் பாடல் வரிகள் (kankaiyaic cataiyul) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவையாறு தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவையாறு
சுவாமி : செம்பொற்சோதீசுவரர்
அம்பாள் : அறம்வளர்த்தநாயகி

கங்கையைச் சடையுள்

கங்கையைச் சடையுள் வைத்தார்
கதிர்பொறி அரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார்
திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்
மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையுள் அனலும் வைத்தார்
ஐயனை யாற னாரே. 1

பொடிதனைப் பூச வைத்தார்
பொங்குவெண் ணூலும் வைத்தார்
கடியதோர் நாகம் வைத்தார்
காலனைக் கால வைத்தார்
வடிவுடை மங்கை தன்னை
மார்பிலோர் பாகம் வைத்தார்
அடியிணை தொழவும் வைத்தார்
ஐயனை யாற னாரே. 2

உடைதரு கீளும் வைத்தார்
உலகங்க ளனைத்தும் வைத்தார்
படைதரு மழுவும் வைத்தார்
பாய்புலித் தோலும் வைத்தார்
விடைதரு கொடியும் வைத்தார்
வெண்புரி நூலும் வைத்தார்
அடைதர அருளும் வைத்தார்
ஐயனை யாற னாரே. 3

தொண்டர்கள் தொழவும் வைத்தார்
தூமதி சடையில் வைத்தார்
இண்டையைத் திகழ வைத்தார்
எமக்கென்று மின்பம் வைத்தார்
வண்டுசேர் குழலி னாளை
மருவியோர் பாகம் வைத்தார்
அண்டவா னவர்கள் ஏத்தும்
ஐயனை யாற னாரே. 4

வானவர் வணங்க வைத்தார்
வல்வினை மாய வைத்தார்
கானிடை நடமும் வைத்தார்
காமனைக் கனலா வைத்தார்
ஆனிடை ஐந்தும் வைத்தார்
ஆட்டுவார்க் கருளும் வைத்தார்
ஆனையின் உரிவை வைத்தார்
ஐயனை யாற னாரே. 5

சங்கணி குழையும் வைத்தார்
சாம்பல்மெய்ப் பூச வைத்தார்
வெங்கதிர் எரிய வைத்தார்
விரிபொழி லனைத்தும் வைத்தார்
கங்குலும் பகலும் வைத்தார்
கடுவினை களைய வைத்தார்
அங்கம தோத வைத்தார்
ஐயனை யாற னாரே. 6

பத்தர்கட் கருளும் வைத்தார்
பாய்விடை யேற வைத்தார்
சித்தத்தை ஒன்ற வைத்தார்
சிவமதே நினைய வைத்தார்
முத்தியை முற்ற வைத்தார்
முறைமுறை நெறிகள் வைத்தார்
அத்தியின் உரிவை வைத்தார்
ஐயனை யாற னாரே. 7

ஏறுகந் தேற வைத்தார்
இடைமரு திடமும் வைத்தார்
நாறுபூங் கொன்றை வைத்தார்
நாகமும் அரையில் வைத்தார்
கூறுமை பாகம் வைத்தார்
கொல்புலித் தோலும் வைத்தார்
ஆறுமோர் சடையில் வைத்தார்
ஐயனை யாற னாரே. 8

பூதங்கள் பலவும் வைத்தார்
பொங்குவெண் ணீறும் வைத்தார்
கீதங்கள் பாட வைத்தார்
கின்னரந் தன்னை வைத்தார்
பாதங்கள் பரவ வைத்தார்
பத்தர்கள் பணிய வைத்தார்
ஆதியும் அந்தம் வைத்தார்
ஐயனை யாற னாரே. 9

இரப்பவர்க் கீய வைத்தார்
ஈபவர்க் கருளும் வைத்தார்
கரப்பவர் தங்கட் கெல்லாங்
கடுநர கங்கள் வைத்தார்
பரப்புநீர்க் கங்கை தன்னைப்
படர்சடைப் பாகம் வைத்தார்
அரக்கனுக் கருளும் வைத்தார்
ஐயனை யாற னாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment