கலையார் மதியோ பாடல் வரிகள் (kalaiyar matiyo) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவையாறு தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவையாறு
சுவாமி : பஞ்சநதீஸ்வரர்
அம்பாள் : தர்மசம்வர்த்தினி

கலையார் மதியோ

கலையார் மதியோ டுரநீரும்
நிலையார் சடையா ரிடமாகும்
மலையா ரமுமா மணிசந்தோ
டலையார் புனல்சே ருமையாறே. 1

மதியொன் றியகொன் றைவடத்தான்
மதியொன் றவுதைத் தவர்வாழ்வு
மதியின் னொடுசேர் கொடிமாடம்
மதியம் பயில்கின் றவையாறே. 2

கொக்கின் னிறகின் னொடுவன்னி
புக்க சடையார்க் கிடமாகும்
திக்கின் னிசைதே வர்வணங்கும்
அக்கின் னரையா ரதையாறே1.

பாடம் : 1 வரையார்தவையாறே 3

சிறைகொண் டபுரம் மவைசிந்தக்
கறைகொண் டவர்கா தல்செய்கோயில்
மறைகொண் டநல்வா னவர்தம்மில்
அறையும் மொலிசே ருமையாறே. 4

உமையா ளொருபா கமதாகச்
சமைவா ரவர்சார் விடமாகும்
அமையா ருடல்சோர் தரமுத்தம்2
அமையா வருமந் தணையாறே.

பாடம் : 2 சேர்தரமுத்தம் சேர்தரு முத்தம் 5

தலையின் தொடைமா லையணிந்து
கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம்
நிலைகொண் டமனத் தவர்நித்தம்
மலர்கொண் டுவணங் குமையாறே. 6

வரமொன் றியமா மலரோன்றன்
சிரமொன் றையறுத் தவர்சேர்வாம்
வரைநின் றிழிவார் தருபொன்னி
அரவங் கொடுசே ருமையாறே. 7

வரையொன் றதெடுத் தஅரக்கன்
சிரமங் கநெரித் தவர்சேர்வாம்
விரையின் மலர்மே தகுபொன்னித்
திரைதன் னொடுசே ருமையாறே. 8

சங்கக் கயனும்3 மறியாமைப்
பொங்குஞ் சுடரா னவர்கோயில்
கொங்கிற் பொலியும் புனல்கொண்டு4
அங்கிக் கெதிர்காட் டுமையாறே.

பாடம் : 3 சங்கத்தயனும் 4புனல்கொண்ட 9

துவரா டையர்தோ லுடையார்கள்
கவர்வாய் மொழிகா தல்செய்யாதே
தவரா சர்கள்தா மரையானோ
டவர்தா மணைஅந் தணையாறே. 10

கலையார் கலிக்கா ழியர்மன்னன்
நலமார் தருஞா னசம்பந்தன்
அலையார் புனல்சூ ழுமையாற்றைச்
சொலுமா லைவல்லார் துயர்வீடே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment