காலைநன் மாமலர் பாடல் வரிகள் (kalainan mamalar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவெங்குரு – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருவெங்குரு – சீர்காழி
சுவாமி : பிரம்மபுரீஸ்வரர்
அம்பாள் : பெரியநாயகி

காலைநன் மாமலர்

காலைநன் மாமலர் கொண்டடி பரவிக்
கைதொழு மாணியைக் கறுத்தவெங் காலன்
ஓலம திடமுன் உயிரொடு மாள
வுதைத்தவன் உமையவள் விருப்பன்எம் பெருமான்
மாலைவந் தணுக ஓதம்வந் துலவி
மறிதிரை சங்கொடு பவளம்முன் உந்தி
வேலைவந் தணையுஞ் சோலைகள் சூழ்ந்த
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 1

பெண்ணினைப் பாகம் அமர்ந்துசெஞ் சடைமேற்
பிறையொடும் அரவினை யணிந்தழ காகப்
பண்ணினைப் பாடி யாடிமுன் பலிகொள்
பரமரெம் அடிகளார் பரிசுகள் பேணி
மண்ணினை மூடி வான்முக டேறி
மறிதிரை கடல்முகந் தெடுப்பமற் றுயர்ந்து
விண்ணள வோங்கி வந்திழி கோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 2

ஓரியல் பில்லா வுருவம தாகி
யொண்திறல் வேடன துருவது கொண்டு
காரிகை காணத் தனஞ்சயன் தன்னைக்
கறுத்தவற்1 களித்துடன் காதல்செய் பெருமான்
நேரிசை யாக அறுபத முரன்று
நிரைமலர்த் தாதுகள் மூசவிண் டுதிர்ந்து
வேரிக ளெங்கும் விம்மிய சோலை
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே

பாடம் : 1 கறுத்ததற் 3

வண்டணை கொன்றை வன்னியு மத்தம்
மருவிய கூவிளம் எருக்கொடு மிக்க
கொண்டணி சடையர் விடையினர் பூதங்
கொடுகொட்டி குடமுழாக் கூடியு முழவப்2
பண்டிகழ் வாகப் பாடியொர் வேதம்
பயில்வர்முன் பாய்புனற் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி உமையவ ளோடும்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

பாடம் : 2 கூடியமுழவம் 4

சடையினர் மேனி நீறது பூசித்
தக்கைகொள் பொக்கண மிட்டுட னாகக்
கடைதொறும் வந்து பலியது கொண்டு
கண்டவர் மனமவை கவர்ந்தழ காகப்
படையது ஏந்திப் பைங்கயற் கண்ணி3
உமையவள் பாகமும் அமர்ந்தருள் செய்து
விடையொடு பூதஞ் சூழ்தரச் சென்று
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

பாடம் : 3 பங்கயக்கண்ணி 5

கரைபொரு கடலில் திரையது மோதக்
கங்குல்வந் தேறிய சங்கமும் இப்பி
உரையுடை முத்தம் மணலிடை வைகி
ஓங்குவான் இருளறத் துரப்பஎண் டிசையும்
புரைமலி வேதம் போற்றுபூ சுரர்கள்
புரிந்தவர் நலங்கொள்ஆ குதியினில் நிறைந்த
விரைமலி தூபம் விசும்பினை மறைக்கும்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 6

வல்லிநுண் இடையாள் உமையவள் தன்னை
மருகிட வருமத களிற்றினை மயங்க
ஒல்லையிற் பிடித்தங் குரித்தவள் வெருவல்
கெடுத்தவர் விரிபொழில் மிகுதிரு ஆலில்
நல்லறம் உரைத்து ஞானமோ டிருப்ப
நலிந்திட லுற்று வந்தஅக் கருப்பு
வில்லியைப் பொடிபட விழித்தவர் விரும்பி
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 7

பாங்கிலா வரக்கன் கயிலைஅன் றெடுப்பப்
பலதலை முடியொடு தோளவை நெரிய
ஓங்கிய விரலால் ஊன்றியன் றவற்கே
ஒளிதிகழ் வாளது கொடுத்தழ காய
கோங்கொடு செருந்தி கூவிள மத்தங்
கொன்றையுங் குலாவிய செஞ்சடைச் செல்வர்
வேங்கைபொன் மலரார்4 விரைதரு கோயில்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே.

பாடம் : 4 மலரா 8

ஆறுடைச் சடையெம் அடிகளைக் காண
அரியொடு பிரமனும் அளப்பதற் காகிச்
சேறிடைத் திகழ்வா னத்திடை புக்குஞ்
செலவறத் தவிர்ந்தனர் எழிலுடைத் திகழ்வெண்
நீறுடைக் கோல மேனியர் நெற்றிக்
கண்ணினர் விண்ணவர் கைதொழு தேத்த
வேறெமை யாள விரும்பிய விகிர்தர்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 9

பாடுடைக் குண்டர் சாக்கியர் சமணர்
பயில்தரு மறவுரை விட்டழ காக
ஏடுடை மலராள் பொருட்டுவன் தக்கன்
எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள் செய்து
காடிடைக் கடிநாய் கலந்துடன் சூழக்
கண்டவர் வெருவுற விளித்துவெய் தாய
வேடுடைக் கோலம் விரும்பியவிகிர் தர்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரே. 10

விண்ணியல் விமானம் விரும்பிய பெருமான்
வெங்குரு மேவியுள் வீற்றிருந் தாரை
நண்ணிய நூலன் ஞானசம் பந்தன்
நவின்றஇவ் வாய்மொழி நலம்மிகு பத்தும்
பண்ணியல் பாகப் பத்திமை யாலே
பாடியு ஆடியும் பயிலவல் லோர்கள்
விண்ணவர் விமானங் கொடுவர ஏறி
வியனுல காண்டுவீற் றிருப்பவர் தாமே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment