கச்சைசேர் அரவர் பாடல் வரிகள் (kaccaicer aravar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநாகேச்சுரம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநாகேச்சுரம்
சுவாமி : சண்பகாரண்ணியேசுவரர்
அம்பாள் : குன்றமுலைநாயகியம்மை

கச்சைசேர் அரவர்

கச்சைசேர் அரவர் போலுங்
கறையணி மிடற்றர் போலும்
பிச்சைகொண் டுண்பர் போலும்
பேரரு ளாளர் போலும்
இச்சையால் மலர்கள் தூவி
இரவொடு பகலுந் தம்மை
நச்சுவார்க் கினியர் போலும்
நாகஈச் சரவ னாரே. 1

வேடுறு வேட ராகி
விசயனோ டெய்தார் போலுங்
காடுறு பதியர் போலுங்
கடிபுனற் கங்கை நங்கை
சேடெறி சடையர் போலுந்
தீவினை தீர்க்க வல்ல
நாடறி புகழர் போலும்
நாகஈச் சரவ னாரே. 2

கற்றுணை வில்ல தாகக்
கடியரண் செற்றார் போலும்
பொற்றுணைப் பாதர் போலும்
புலியத ளுடையார் போலுஞ்
சொற்றுணை மாலை கொண்டு
தொழுதெழு வார்கட் கெல்லாம்
நற்றுணை யாவர் போலும்
நாகஈச் சரவ னாரே. 3

கொம்பனாள் பாகர் போலுங்
கொடியுடை விடையர் போலுஞ்
செம்பொனா ருருவர் போலுந்
திகழ்திரு நீற்றர் போலும்
எம்பிரான் எம்மை யாளும்
இறைவனே என்று தம்மை
நம்புவார்க் கன்பர் போலும்
நாகஈச் சரவ னாரே. 4

கடகரி யுரியர் போலுங்
கனல்மழு வாளர் போலும்
படவர வரையர் போலும்
பாரிடம் பலவுங் கூடிக்
குடமுடை முழவம் ஆர்ப்பக்
கூளிகள் பாட நாளும்
நடநவில் அடிகள் போலும்
நாகஈச் சரவ னாரே. 5

பிறையுறு சடையர் போலும்
பெண்ணொரு பாகர் போலும்
மறையுறு மொழியர் போலும்
மால்மறை யவன்ற னோடு
முறைமுறை அமரர் கூடி
முடிகளால் வணங்க நின்ற
நறவமர் கழலர் போலும்
நாகஈச் சரவ னாரே. 6

வஞ்சகர்க் கரியர் போலும்
மருவினோர்க் கெளியர் போலுங்
குஞ்சரத் துரியர் போலுங்
கூற்றினைக் குமைப்பர் போலும்
விஞ்சையர் இரிய அன்று
வேலைவாய் வந்தெ ழுந்த
நஞ்சணி மிடற்றர் போலும்
நாகஈச் சரவ னாரே. 7

போகமார் மோடி கொங்கை
புணர்தரு புனிதர் போலும்
வேகமார் விடையர் போலும்
வெண்பொடி யாடு மேனிப்
பாகமா லுடையர் போலும்
பருப்பத வில்லர் போலும்
நாகநா ணுடையர் போலும்
நாகஈச் சரவ னாரே. 8

கொக்கரை தாளம் வீணை
பாணிசெய் குழகர் போலும்
அக்கரை யணிவர் போலும்
ஐந்தலை யரவர் போலும்
வக்கரை யமர்வர் போலும்
மாதரை மையல் செய்யும்
நக்கரை யுருவர் போலும்
நாகஈச் சரவ னாரே. 9

வின்மையாற் புரங்கள் மூன்றும்
வெந்தழல் விரித்தார் போலும்
தன்மையால் அமரர் தங்கள்
தலைவர்க்குந் தலைவர் போலும்
வன்மையான் மலையெ டுத்தான்
வலியினைத் தொலைவித் தாங்கே
நன்மையால் அளிப்பர் போலும்
நாகஈச் சரவ னாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment