இயலிசை யெனும்பொரு பாடல் வரிகள் (iyalicai yenumporu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புகலி – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்புகலி – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி
இயலிசை யெனும்பொரு
இயலிசை யெனும்பொரு ளின்திறமாம்
புயலன மிடறுடைப் புண்ணியனே
கயலன அரிநெடுங் கண்ணியொடும்
அயலுல கடிதொழ அமர்ந்தவனே
கலனாவது வெண்டலை கடிபொழிற் புகலிதன்னுள்
நிலனாள்தொறும் இன்புற நிறைமதி யருளினனே. 1
நிலையுறும் இடர்நிலை யாதவண்ணம்
இலையுறு மலர்கள்கொண் டேத்துதும்யாம்
மலையினில் அரிவையை வெருவவன்தோல்
அலைவரு மதகரி யுரித்தவனே
இமையோர்கள்நின் தாள்தொழ எழில்திகழ் பொழிற்புகலி
உமையாளொடு மன்னினை உயர்திரு வடியிணையே. 2
பாடினை அருமறை வரல்முறையால்
ஆடினை காணமுன் அருவனத்திற்
சாடினை காலனைத் தயங்கொளிசேர்
நீடுவெண் பிறைமுடி நின்மலனே
நினையேயடி யார்தொழ நெடுமதிற் புகலிந்நகர்
தனையேயிட மேவினை தவநெறி அருளெமக்கே. 3
நிழல்திகழ் மழுவினை யானையின்தோல்
அழல்திகழ் மேனியில் அணிந்தவனே
கழல்திகழ் சிலம்பொலி யலம்பநல்ல
முழவொடும் அருநட முயற்றினனே
முடிமேல்மதி சூடினை முருகமர் பொழிற்புகலி
அடியாரவ ரேத்துற அழகொடும் இருந்தவனே. 4
கருமையின் ஒளிர்கடல் நஞ்சமுண்ட
உரிமையின் உலகுயிர் அளித்தநின்றன்
பெருமையை நிலத்தவர் பேசினல்லால்
அருமையில் அளப்பரி தாயவனே
அரவேரிடை யாளொடும் அலைகடல் மலிபுகலிப்
பொருள்சேர்தர நாடொறும் புவிமிசைப் பொலிந்தவனே. 5
அடையரி மாவொடு வேங்கையின்தோல்
புடைபட அரைமிசைப் புனைந்தவனே
படையுடை நெடுமதிற் பரிசழித்த
விடையுடைக் கொடிமல்கு வேதியனே
விகிர்தாபர மாநின்னை விண்ணவர் தொழப்புகலித்
தகுவாய்மட மாதொடுந் தாள்பணிந் தவர்தமக்கே. 6
அடியவர் தொழுதெழ அமரரேத்தச்
செடியவல் வினைபல தீர்ப்பவனே
துடியிடை அகலல்குல் தூமொழியைப்
பொடியணி மார்புறப் புல்கினனே
புண்ணியா புனிதாபுக ரேற்றினை புகலிந்நகர்
நண்ணினாய் கழலேத்திட நண்ணகிலா வினையே. 7
இரவொடு பகலதாம் எம்மானுன்னைப்
பரவுதல் ஒழிகிலேன் வழியடியேன்
குரவிரி நறுங்கொன்றை கொண்டணிந்த
அரவிரி சடைமுடி ஆண்டகையே
அனமென்னடை யாளொடும் அதிர்கடல் இலங்கைமன்னை
இனமார்தரு தோளடர்த் திருந்தனை புகலியுளே. 8
உருகிட வுவகைதந் துடலினுள்ளால்
பருகிடும் அமுதன பண்பினனே
பொருகடல் வண்ணனனும் பூவுளானும்
பெருகிடும் அருளெனப் பிறங்கெரியாய்
உயர்ந்தாயினி நீயெனை ஒண்மலரடி யிணைக்கீழ்
வயந்தாங்குற நல்கிடு வளர்மதிற் புகலிமனே. 9
கையினி லுண்பவர் கணிகைநோன்பர்
செய்வன தவமலாச் செதுமதியார்
பொய்யவ ருரைகளைப் பொருளெனாத
மெய்யவ ரடிதொழ விரும்பினனே
வியந்தாய்வெள் ளேற்றினை விண்ணவர் தொழுபுகலி
உயர்ந்தார்பெருங் கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே. 10
புண்ணியர் தொழுதெழு புகலிந்நகர்
விண்ணவ ரடிதொழ விளங்கினானை
நண்ணிய ஞானசம் பந்தன்வாய்மை
பண்ணிய அருந்தமிழ் பத்தும்வல்லார்
நடலையவை யின்றிப்போய் நண்ணுவர் சிவனுலகம்
இடராயின இன்றித்தாம் எய்துவர் தவநெறியே.
திருச்சிற்றம்பலம்