இரும்புகொப் பளித்த பாடல் வரிகள் (irumpukop palitta) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவதிகைவீரட்டானம் தலம் நடுநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : நடுநாடு
தலம் : திருவதிகைவீரட்டானம்
சுவாமி : வீரட்டானேஸ்வரர்
அம்பாள் : திரிபுரசுந்தரி

இரும்புகொப் பளித்த

இரும்புகொப் பளித்த யானை
ஈருரி போர்த்த ஈசன்
கரும்புகொப் பளித்த இன்சொற்
காரிகை பாக மாகச்
சுரும்புகொப் பளித்த கங்கைத்
துவலைநீர் சடையி லேற்ற
அரும்புகொப் பளித்த சென்னி
அதிகைவீ ரட்ட னாரே. 1

கொம்புகொப் பளித்த திங்கட்
கோணல்வெண் பிறையுஞ் சூடி
வம்புகொப் பளித்த கொன்றை
வளர்சடை மேலும் வைத்துச்
செம்புகொப் பளித்த மூன்று
மதிலுடன் சுருங்க வாங்கி
அம்புகொப் பளிக்க எய்தார்
அதிகைவீ ரட்ட னாரே. 2

விடையுங்கொப் பளித்த பாதம்
விண்ணவர் பரவி யேத்தச்
சடையுங்கொப் பளித்த திங்கட்
சாந்தவெண் ணீறு பூசி
உடையுங்கொப் பளித்த நாகம்
உள்குவார் உள்ளத் தென்றும்
அடையுங்கொப் பளித்த சீரார்
அதிகைவீ ரட்ட னாரே. 3

கறையுங்கொப் பளித்த கண்டர்
காமவேள் உருவம் மங்க
இறையுங்கொப் பளித்த கண்ணார்
ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார்
மறையுங்கொப் பளித்த நாவர்
வண்டுண்டு பாடுங் கொன்றை
அறையுங்கொப் பளித்த சென்னி
அதிகைவீ ரட்ட னாரே. 4

நீறுகொப் பளித்த மார்பர்
நிழல்திகழ் மழுவொன் றேந்திக்
கூறுகொப் பளித்த கோதைக்
கோல்வளை மாதோர் பாகம்
ஏறுகொப் பளித்த பாதம்
இமையவர் பரவி யேத்த
ஆறுகொப் பளித்த சென்னி
அதிகைவீ ரட்ட னாரே. 5

வணங்குகொப் பளித்த பாதம்
வானவர் பரவி யேத்தப்
பிணங்குகொப் பளித்த சென்னிச்
சடையுடைப் பெருமை யண்ணல்
சுணங்குகொப் பளித்த கொங்கைச்
சுரிகுழல் பாக மாக
அணங்குகொப் பளித்த மேனி
அதிகைவீ ரட்ட னாரே. 6

சூலங்கொப் பளித்த கையர்
சுடர்விடு மழுவாள் வீசி
நூலுங்கொப் பளித்த மார்பில்
நுண்பொறி யரவஞ் சேர்த்தி
மாலுங்கொப் பளித்த பாகர்
வண்டுபண் பாடுங் கொன்றை
ஆலங்கொப் பளித்த கண்டத்
ததிகைவீ ரட்ட னாரே. 7

நாகங்கொப் பளித்த கையர்
நான்மறை யாய பாடி
மேகங்கொப் பளித்த திங்கள்
விரிசடை மேலும் வைத்துப்
பாகங்கொப் பளித்த மாதர்
பண்ணுடன் பாடி யாட
ஆகங்கொப் பளித்த தோளார்
அதிகைவீ ரட்ட னாரே. 8

பரவுகொப் பளித்த பாடல்
பண்ணுடன் பத்தர் ஏத்த
விரவுகொப் பளித்த கங்கை
விரிசடை மேவ வைத்து
இரவுகொப் பளித்த கண்டர்
ஏத்துவா ரிடர்கள் தீர்ப்பார்
அரவுகொப் பளித்த கையர்
அதிகைவீ ரட்ட னாரே. 9

தொண்டைகொப் பளித்த செவ்வாய்த்
துடியிடைப் பரவை யல்குற்
கொண்டைகொப் பளித்த கோதைக்
கோல்வளை பாக மாக
வண்டுகொப் பளித்த தீந்தேன்
வரிக்கயல் பருகி மாந்தக்
கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க்
கெடிலவீ ரட்ட னாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment