இரங்கா வன்மனத் பாடல் வரிகள் (iranka vanmanat) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் தென்குரங்காடுதுறை – ஆடுதுரை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 5
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : தென்குரங்காடுதுறை – ஆடுதுரை
அம்பாள் : பவளக்கொடியம்மை

இரங்கா வன்மனத்

இரங்கா வன்மனத்
தார்கள் இயங்குமுப்
புரங்கா வல்லழி
யப்பொடி யாக்கினான்
தரங்கா டுந்தட
நீர்ப்பொன்னித் தென்கரைக்
குரங்கா டுதுறைக்
கோலக் கபாலியே. 1

முத்தி னைமணி
யைப்பவ ளத்தொளிர்
தொத்தி னைச்சுடர்
சோதியைச் சோலைசூழ்
கொத்த லர்குரங்
காடு துறையுறை
அத்த னென்னஅண்
ணித்திட் டிருந்ததே. 2

குளிர்பு னற்குரங்
காடு துறையனைத்
தளிர்நி றத்தையல்
பங்கனைத் தண்மதி
ஒளிய னைந்நினைந்
தேனுக்கென் உள்ளமுந்
தெளிவி னைத்தெளி
யத்தெளிந் திட்டதே. 3

மணவன் காண்மலை
யாள்நெடு மங்கலக்
கணவன் காண்கலை
ஞானிகள் காதலெண்
குணவன் காண்குரங்
காடு துறைதனில்
அணவன் காணன்பு
செய்யு மடியர்க்கே. 4

ஞாலத் தார்தொழு
தேத்திய நன்மையன்
காலத் தானுயிர்
போக்கிய காலினன்
நீலத் தார்மிடற்
றான்வெள்ளை நீறணி
கோலத் தான்குரங்
காடு துறையனே. 5

ஆட்டி னான்முன்
அமணரோ டென்றனைப்
பாட்டி னான்றன
பொன்னடிக் கின்னிசை
வீட்டி னான்வினை
மெய்யடி யாரொடுங்
கூட்டி னான்குரங்
காடு துறையனே. 6

மாத்தன் றான்மறை
யார்முறை யான்மறை
ஓத்தன் தாரகன்
றன்னுயி ருண்டபெண்
போத்தன் றானவன்
பொங்கு சினந்தணி
கூத்தன் றான்குரங்
காடு துறையனே. 7

நாடி நந்தம
ராயின தொண்டர்காள்
ஆடு மின்னழு
மின்தொழு மின்னடி
பாடு மின்பர
மன்பயி லும்மிடங்
கூடு மின்குரங்
காடு துறையையே. 8

தென்றல் நன்னெடுந்
தேருடை யானுடல்
பொன்ற வெங்கனல்
பொங்க விழித்தவன்
அன்ற வந்தக
னையயிற் சூலத்தாற்
கொன்ற வன்குரங்
காடு துறையனே. 9

நற்ற வஞ்செய்த
நால்வர்க்கு நல்லறம்
உற்ற நன்மொழி
யாலருள் செய்தநற்
கொற்ற வன்குரங்
காடு துறைதொழப்
பற்றுந் தீவினை
யாயின பாறுமே. 10

கடுத்த தேரரக்
கன்கயி லைம்மலை
எடுத்த தோள்தலை
யிற்றல றவ்விரல்
அடுத்த லுமவன்
இன்னிசை கேட்டருள்
கொடுத்த வன்குரங்
காடு துறையனே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment