இறையவன் ஈசன்எந்தை பாடல் வரிகள் (iraiyavan icanentai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பிரமபுரம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பிரமபுரம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

இறையவன் ஈசன்எந்தை

இறையவன் ஈசன்எந்தை
இமையோர்தொழு தேத்தநின்ற
கறையணி கண்டன்வெண்தோ
டணிகாதினன் காலத்தன்று
மறைமொழி வாய்மையினான்
மலையாளொடு மன்னுசென்னிப்
பிறையணி செஞ்சடையான்
பிரமாபுரம் பேணுமினே. 1

சடையினன் சாமவேதன்
சரிகோவண வன்மழுவாட்
படையினன் பாய்புலித்தோ
லுடையான்மறை பல்கலைநூல்
உடையவன் ஊனமில்லி
யுடனாயுமை நங்கையென்னும்
பெடையொடும் பேணுமிடம்
பிரமாபுரம் பேணுமினே. 2

மாணியை நாடுகாலன்
உயிர்மாய்தரச் செற்றுக்காளி
காணிய ஆடல்கொண்டான்
கலந்தூர்வழி சென்றுபிச்சை
ஊணியல் பாகக்கொண்டங்
குடனேயுமை நங்கையொடும்
பேணிய கோயில்மன்னும்
பிரமாபுரம் பேணுமினே. 3

பாரிடம் விண்ணுமெங்கும்
பயில்நஞ்சு பரந்துமிண்டப்
பேரிடர்த் தேவர்கணம்
பெருமானிது காவெனலும்
ஓரிடத்தே கரந்தங்
குமைநங்கையொ டும்முடனே
பேரிட மாகக்கொண்ட
பிரமாபுரம் பேணுமினே. 4

நச்சர வச்சடைமேல்
நளிர்திங்களு மொன்றவைத்தங்
கச்சமெ ழவிடைமேல்
அழகார்மழு வேந்திநல்ல
இச்சை பகர்ந்துமிக
இடுமின்பலி யென்றுநாளும்
பிச்சைகொள் அண்ணல்நண்ணும்
பிரமாபுரம் பேணுமினே. 5

பெற்றவன் முப்புரங்கள்
பிழையாவண்ணம் வாளியினாற்
செற்றவன் செஞ்சடையில்
திகழ்கங்கைத னைத்தரித்திட்
டொற்றை விடையினனாய்
உமைநங்கையொ டும்முடனே
பெற்றிமை யாலிருந்தான்
பிரமாபுரம் பேணுமினே. 6

வேத மலிந்தஒலி
விழவின்னொலி வீணையொலி
கீத மலிந்துடனே
கிளரத்திகழ் பௌவமறை
ஓத மலிந்துயர்வான்
முகடேறவொண் மால்வரையான்
பேதை யொடும்மிருந்தான்
பிரமாபுரம் பேணுமினே. 7

இமையவர் அஞ்சியோட
எதிர்வாரவர் தம்மையின்றி
அமைதரு வல்லரக்கன்
அடர்த்தும்மலை அன்றெடுப்பக்
குமையது செய்துபாடக்
கொற்றவாளொடு நாள்கொடுத்திட்
டுமையொ டிருந்தபிரான்
பிரமாபுரம் உன்னுமினே. 8

ஞாலம் அளித்தவனும்
அரியும்மடி யோடுமுடி
காலம் பலசெலவுங்
கண்டிலாமையி னாற்கதறி
ஓல மிடஅருளி
உமைநங்கையொ டும்முடனாய்
ஏல இருந்தபிரான்
பிரமாபுரம் ஏத்துமினே. 9

துவருறும் ஆடையினார்
தொக்கபீலியர் நக்கரையர்
அவரவர் தன்மைகள்கண்
டணுகேன்மின் னருள்பெறுவீர்
கவருறு சிந்தையொன்றிக்
கழிகாலமெல் லாம்படைத்த
இவரவர் என்றிறைஞ்சிப்
பிரமாபுரம் ஏத்துமினே. 10

உரைதரு நான்மறையோர்
புகழ்ந்தேத்தவொண் மாதினொடும்
வரையென வீற்றிருந்தான்
மலிகின்ற பிரமபுரத்
தரசினை யேத்தவல்ல
அணிசம்பந்தன் பத்தும்வல்லார்
விரைதரு விண்ணுலகம்
எதிர்கொள்ள விரும்புவரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment