இன்குர லிசைகெழும் பாடல் வரிகள் (inkura licaikelum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் சிவபுரம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : சிவபுரம்
சுவாமி : சிவகுருநாதசுவாமி
அம்பாள் : ஆர்யாம்பாள்

இன்குர லிசைகெழும்

இன்குர லிசைகெழும் யாழ்முரலத்
தன்கரம் மருவிய சதுரன்நகர்
பொன்கரை பொருபழங் காவிரியின்
தென்கரை மருவிய சிவபுரமே. 1

அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப்
பொன்றிட வுதைசெய்த புனிதன்நகர்
வென்றிகொள் ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள்
சென்றடி வீழ்தரு சிவபுரமே. 2

மலைமகள் மறுகிட மதகரியைக்
கொலைமல்க வுரிசெய்த குழகன்நகர்
அலைமல்கும் (*)அரிசிலி னதனயலே
சிலைமல்கு மதிலணி சிவபுரமே.

(*) அரிசில் என்பது ஒரு நதி. 3

மண்புன லனலொடு மாருதமும்
விண்புனை மருவிய விகிர்தன்நகர்
பண்புனை குரல்வழி வண்டுகெண்டிச்
செண்பக மலர்பொழிற் சிவபுரமே. 4

வீறுநன் குடையவள் மேனிபாகங்
கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்
நாறுநன் குரவிரி வண்டுகிண்டித்
தேறலுண் டெழுதரு சிவபுரமே. 5

மாறெதிர் வருதிரி புரமெரித்து
நீறது வாக்கிய நிமலன்நகர்
நாறுடை நடுபவர் உழவரொடுஞ்
சேறுடை வயலணி சிவபுரமே. 6

ஆவிலைந் தமர்ந்தவன் அரிவையொடு
மேவிநன் கிருந்ததொர் வியனகர்தான்
பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச்
சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே. 7

எழின்மலை யெடுத்தவல் லிராவணன்றன்
முழுவலி யடக்கிய முதல்வன்நகர்
விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து
செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே. 8

சங்கள வியகையன் சதுர்முகனும்
அங்கள வறிவரி யவன்நகர்தான்
கங்குலும் பறவைகள் கமுகுதொறுஞ்
செங்கனி நுகர்தரு சிவபுரமே. 9

மண்டையின் குண்டிகை மாசுதரும்
மிண்டரை விலக்கிய விமலன்நகர்
பண்டமர் தருபழங் காவிரியின்
தெண்டிரை பொருதெழு சிவபுரமே. 10

சிவனுறை தருசிவ புரநகரைக்
கவுணியர் குலபதி காழியர்கோன்
தவமல்கு தமிழிவை சொல்லவல்லார்
நவமொடு சிவகதி நண்ணுவரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment