எரிதர அனல்கையில் பாடல் வரிகள் (eritara analkaiyil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் அம்பர்ப்பெருந்திருக்கோயில் – அம்பல் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : அம்பர்ப்பெருந்திருக்கோயில் – அம்பல்
சுவாமி : பிரமபுரிநாதேசுவரர்
அம்பாள் : பூங்குழனாயகியம்மை

எரிதர அனல்கையில்

எரிதர அனல்கையில்
ஏந்தி எல்லியில்
நரிதிரி கானிடை
நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல்
அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன்
கோயில் சேர்வரே. 1

மையகண் மலைமகள்
பாக மாயிருள்
கையதோர் கனலெரி
கனல ஆடுவர்
ஐயநன் பொருபுனல்
அம்பர்ச் செம்பியர்
செய்யகண் ணிறைசெய்த
கோயில் சேர்வரே. 2

மறைபுனை பாடலர்
சுடர்கை மல்கவோர்
பிறைபுனை சடைமுடி
பெயர ஆடுவர்
அறைபுனல் நிறைவயல்
அம்பர் மாநகர்
இறைபுனை யெழில்வளர்
இடம தென்பரே. 3

இரவுமல் கிளமதி
சூடி யீடுயர்
பரவமல் கருமறை
பாடி யாடுவர்
அரவமோ டுயர்செம்மல்
அம்பர்க் கொம்பலர்
மரவமல் கெழில்நகர்
மருவி வாழ்வரே. 4

சங்கணி குழையினர்
சாமம் பாடுவர்
வெங்கனல் கனல்தர
வீசி யாடுவர்
அங்கணி விழவமர்
அம்பர் மாநகர்ச்
செங்கண்நல் இறைசெய்த
கோயில் சேர்வரே 5

கழல்வளர் காலினர்
சுடர்கை மல்கவோர்
சுழல்வளர் குளிர்புனல்
சூடி யாடுவர்
அழல்வளர் மறையவர்
அம்பர்ப் பைம்பொழில்
நிழல்வளர் நெடுநகர்
இடம தென்பரே. 6

இகலுறு சுடரெரி
இலங்க வீசியே
பகலிடம் பலிகொளப்
பாடி யாடுவர்
அகலிடம் மலிபுகழ்
அம்பர் வம்பவிழ்
புகலிடம் நெடுநகர்
புகுவர் போலுமே 7

எரியன மணிமுடி
இலங்கைக் கோன்றன
கரியன தடக்கைகள்
அடர்த்த காலினர்
அரியவர் வளநகர்
அம்பர் இன்பொடு
புரியவர் பிரிவிலாப்
பூதஞ் சூழவே. 8

வெறிகிளர் மலர்மிசை
யவனும் வெந்தொழிற்
பொறிகிளர் அரவணைப்
புல்கு செல்வனும்
அறிகில அரியவர்
அம்பர்ச் செம்பியர்
செறிகழல் இறைசெய்த
கோயில் சேர்வரே. 9

வழிதலை பறிதலை
யவர்கள் கட்டிய
மொழிதலைப் பயனென
மொழியல் வம்மினோ
அழிதலை பொருபுனல்
அம்பர் மாநகர்
உழிதலை யொழிந்துளர்
உமையுந் தாமுமே. 10

அழகரை யடிகளை
அம்பர் மேவிய
நிழல்திகழ் சடைமுடி
நீல கண்டரை
உமிழ்திரை யுலகினில்
ஓதுவீர் கொண்மின்
தமிழ்கெழு விரகினன்
தமிழ்செய் மாலையே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment