Sivan Songs

எறிக்குங் கதிர்வேய் பாடல் வரிகள் | erikkun katirvey Thevaram song lyrics in tamil

எறிக்குங் கதிர்வேய் பாடல் வரிகள் (erikkun katirvey) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவெஞ்சமாக்கூடல் தலம் கொங்குநாடு நாட்டில் சுந்தரர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சுந்தரர்
திருமுறை : 7
நாடு : கொங்குநாடு
தலம் : திருவெஞ்சமாக்கூடல்எறிக்குங் கதிர்வேய்

எறிக்குங் கதிர்வேய் உதிர்முத் தம்மோடே
லம் இலவங்கந் தக்கோலம் இஞ்சி
செறிக்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றா றதன்கீழ்க் கரைமேல்
முறிக்குந் தழைமா முடப்புன்னை ஞாழல்
குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா
வெறிக்குங் கலைமா வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 1

குளங்கள் பலவுங் குழியுந் நிறையக்
குடமாமணி சந்தனமும் அகிலுந்
துளங்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றா றதன்கீழ்க் கரைமேல்
வளங்கொள் மதில்மா ளிகைகோ புரமும்
மணிமண்டபமும் இவைமஞ்சு தன்னுள்
விளங்கும் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 2

வரைமான் அனையார் மயிற்சாயல் நல்லார்
வடிவேற் கண்நல்லார் பலர்வந் திறைஞ்சத்
திரையார் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றா றதன்கீழ்க் கரைமேல்
நிரையார் கமுகும் நெடுந்தாள் தெங்கும்
குறுந்தாட்பலவும் விரவிக் குளிரும்
விரையார் பொழில்சூழ் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 3

பண்ணேர் மொழியா ளையோர்பங் குடையாய்
படுகாட் டகத்தென் றும்ஓர்பற் றொழியாய்
தண்ணார் அகிலும் நலசா மரையும்
அலைத்தெற்று சிற்றா றதன்கீழ்க்கரைமேல்
மண்ணார் முழவுங் குழலும் இயம்ப
மடவார் நடமாடு மணியரங்கில்
விண்ணார் மதிதோய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 4

துளைவெண் குழையுஞ் சுருள்வெண் தோடுந்
தூங்குங் காதிற் துளங்கும் படியாய்
களையே கமழும் மலர்க்கொன் றையினாய்
கலந்தார்க் கருள்செய் திடுங்கற் பகமே
பிளைவெண் பிறையாய் பிறங்குஞ் சடையாய்
பிறவா தவனே பெறுதற் கரியாய்
வெளைமால் விடையாய் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 5

தொழுவார்க் கெளியாய் துயர்தீர நின்றாய்
சுரும்பார் மலர்க்கொன் றைதுன்றுஞ் சடையாய்
உழுவார்க் கரிய விடையேறி ஒன்னார்
புரந்தீ எழஓ டுவித்தாய் அழகார்
முழவா ஒலிபாட லொடா டல்அறா
முதுகா டரங்கா நடமாட வல்லாய்
விழவார் மறுகின் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 6

கடமா களியா னைஉரித் தவனே
கரிகா டிடமா அனல்வீசி நின்று
நடமா டவல்லாய் நரையே றுகந்தாய்
நல்லாய் நறுங்கொன் றைநயந் தவனே
படம்ஆ யிரமாம் பருத்துத் திப்பைங்கண்
பகுவாய் எயிற்றோ டழலே உமிழும்
விடவார் அரவா வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 7

காடும் மலையும் நாடு மிடறிக்
கதிர்மா மணிசந் தனமும் அகிலுஞ்
சேட னுறையும் மிடந்தான் விரும்பி
திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேற்
பாடல் முழவுங் குழலு மியம்பப்
பணைத்தோ ளியர்பா டலொடா டல்அறா
வேடர் விரும்பும் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியேனையும் வேண்டுதியே. 8

கொங்கார் மலர்க்கொன் றையந்தா ரவனே
கொடுகொட்டி யொர்வீ ணைஉடை யவனே
பொங்கா டரவும் புனலுஞ் சடைமேற்
பொதியும் புனிதா புனஞ்சூழ்ந் தழகார்
துங்கார் புனலுட் பெய்துகொண்டு மண்டித்
திளைத்தெற்று சிற்றா றதன்கீழ்க் கரைமேல்
வெங்கார் வயல்சூழ் வெஞ்சமாக் கூடல்
விகிர்தா அடியே னையும்வேண் டுதியே. 9

வஞ்சிநுண் ணிடையார் மயிற்சாய லன்னார்
வடிவேற் கண்நல்லார் பலர்வந் திறைஞ்சும்
வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியே
னையும்வேண் டுதியே என்றுதான் விரும்பி
வஞ்சியா தளிக்கும் வயல்நா வலர்கோன்
வனப்பகை யப்பன் வன்றொண்டன் சொன்ன
செஞ்சொல் தமிழ்மா லைகள்பத் தும்வல்லார்
சிவலோ கத்திருப் பதுதிண் ணமன்றே. 10

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment