எண்டிசைக் கும்புகழ் பாடல் வரிகள் (enticaik kumpukal) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் இன்னம்பர் – இன்னம்பூர் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : இன்னம்பர் – இன்னம்பூர்
அம்பாள் : கொந்தார்பூங்குழலம்மை

எண்டிசைக் கும்புகழ்

எண்டிசைக் கும்புகழ் இன்னம்பர் மேவிய
வண்டிசைக் குஞ்சடை யீரே
வண்டிசைக் குஞ்சடை யீருமை வாழ்த்துவார்
தொண்டிசைக் குந்தொழி லோரே. 1

யாழ்நரம் பின்னிசை இன்னம்பர் மேவிய
தாழ்தரு சடைமுடி யீரே
தாழ்தரு சடைமுடி யீருமைச் சார்பவர்
ஆழ்துயர் அருவினை யிலரே. 2

இளமதி நுதலியோ டின்னம்பர் மேவிய
வளமதி வளர்சடை யீரே
வளமதி வளர்சடை யீருமை வாழ்த்துவார்
உளமதி மிகவுடை யோரே. 3

இடிகுரல் இசைமுரல் இன்னம்பர் மேவிய
கடிகமழ் சடைமுடி யீரே
கடிகமழ் சடைமுடி யீரும கழல்தொழும்
அடியவர் அருவினை யிலரே. 4

இமையவர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய
உமையொரு கூறுடை யீரே
உமையொரு கூறுடை யீருமை உள்குவார்
அமைகில ராகிலர் அன்பே. 5

எண்ணரும் புகழுடை இன்னம்பர் மேவிய
தண்ணருஞ் சடைமுடி யீரே
தண்ணருஞ் சடைமுடி யீருமைச் சார்பவர்
விண்ணவர் அடைவுடை யோரே. 6

எழில்திக ழும்பொழில் இன்னம்பர் மேவிய
நிழல்திகழ் மேனியி னீரே
நிழல்திகழ் மேனியி னீருமை நினைபவர்
குழறிய கொடுவினை யிலரே. 7

ஏத்தரும் புகழணி இன்னம்பர் மேவிய
தூர்த்தனைத் தொலைவுசெய் தீரே
தூர்த்தனைத் தொலைவுசெய் தீருமைத் தொழுபவர்
கூர்த்தநற் குணமுடை யோரே. 8

இயலுளோர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய
அயனுமால் அறிவரி யீரே
அயனுமால் அறிவரி யீரும தடிதொழும்
இயலுளார் மறுபிறப் பிலரே. 9

ஏரமர் பொழிலணி இன்னம்பர் மேவிய
தேரமண் சிதைவுசெய் தீரே
தேரமண் சிதைவுசெய் தீருமைச் சேர்பவ
ரார்துயர் அருவினை யிலரே. 10

ஏடமர் பொழிலணி இன்னம்பர் ஈசனை
நாடமர் ஞானசம் பந்தன்
நாடமர் ஞானசம் பந்தன நற்றமிழ்
பாடவல் லார்பழி யிலரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment