Enna Pathigam Lyrics in Tamil

எண்ணப்பதிகம் (Enna pathigam lyrics tamil)

அருளியவர் : மாணிக்கவாசகர்
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
நாடு : சோழநாடு காவிரி வடகரை

சிறப்பு: ஒழியா இன்பத்து உவகை; ஆசிரிய விருத்தம்.

திருச்சிற்றம்பலம்

பாருரு வாய பிறப்பறவேண்டும்
பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே
செங் கமல மலர்போல்
ஆருரு வாயஎன் னார முதேஉன்
அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி
என்னையும் உய்யக்கொண் டருளே. 1

உரியேன் அல்லேன் உனக் கடிமை
உன்னைப் பிரிந்திங் கொருபொழுதும்
தரியேன் நாயேன் இன்னதென்று
அறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள் என்றுன்
பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும்
பொய்யோ எங்கள் பெருமானே. 2

என்பே உருகநின் அருள்அளித்துன்
இணைமலர் அடி காட்டி
முன்பே என்னை ஆண்டுகொண்ட
முனிவா முனிவர் முழுமுதலே
இன்பே அருளி எனையுருக்கி
உயிருண் கின்ற எம்மானே
நண்பே யருளாய் என்னுயிர் நாதா
நின்னருள் நாணாமே 3

பத்தில னேனும் பணிந்தில னேனும்உன்
உயர்ந்தபைங் கழல் காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும்
பிறப்பறுப்பாய் எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே
முதல்வ னேமுறை யோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை
இனிப்பிரிந் தாற்றேனே. 4

காணும தொழிந்தேன் நின்திருப் பாதம்
கண்டு கண் களிகூரப்
பேணும தொழிந்தேன் பிதற்றும தொழிந்தேன்
பின்னைஎம் பெருமானே
தாணுவே அழிந்தேன் நின்னினைந் துருகுந்
தன்மைஎன் புன்மைகளால்
காணும தொழிந்தேன் நீயினி வரி னுங்
காணவும் நாணுவனே. 5

பாற்றிரு நீற்றெம் பரமனைப்
பரங்கரு ணையோடும் எதிர்ந்து
தோற்றிமெய் யடியார்க் கருட்டுறை
யளிக்குஞ் சோதியை நீதி யிலேன்
போற்றியென் அமுதே என நினைந்
தேத்திப் புகழ்ந்தழைத் தலறியென் னுள்ளே
ஆற்றுவனாக உடையவ னேஎனை
ஆவஎன் றருளாயே. 6

Leave a Comment