எம்பிரான் எனக்கமுத மாவானுந் பாடல் வரிகள் (empiran enakkamuta mavanun) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பிரமபுரம் – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பிரமபுரம் – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

எம்பிரான் எனக்கமுத மாவானுந்

எம்பிரான் எனக்கமுத
மாவானுந் தன்னடைந்தார்
தம்பிரான் ஆவானுந்
தழலேந்து கையானுங்
கம்பமா கரியுரித்த
காபாலி கறைக்கண்டன்
வம்புலாம் பொழிற்பிரம
புரத்துறையும் வானவனே. 1

தாமென்றும் மனந்தளராத்
தகுதியராய் உலகத்துக்
காமென்று சரண்புகுந்தார்
தமைக்காக்குங் கருணையினான்
ஓமென்று மறைபயில்வார்
பிரமபுரத் துறைகின்ற
காமன்றன் உடலெரியக்
கனல்சேர்ந்த கண்ணானே. 2

நன்னெஞ்சே யுனையிரந்தேன்
நம்பெருமான் திருவடியே
உன்னஞ்செய் திருகண்டாய்
உய்வதனை வேண்டுதியேல்
அன்னஞ்சேர் பிரமபுரத்
தாரமுதை எப்போதும்
பன்னுஞ்சீர் வாயதுவே
பார்கண்ணே பரிந்திடவே. 3

சாநாளின் றிம்மனமே
சங்கைதனைத் தவிர்ப்பிக்குங்
கோனாளுந் திருவடிக்கே
கொழுமலர்தூ வெத்தனையுந்
தேனாளும் பொழிற்பிரம
புரத்துறையுந் தீவணனை
நாநாளும் நல்நியமஞ்
செய்தவன்சீர் நவின்றேத்தே. 4

கண்ணுதலான் வெண்ணீற்றான்
கமழ்சடையான் விடையேறி
பெண்ணிதமாம் உருவத்தான்
பிஞ்ஞகன்பேர் பலவுடையான்
விண்ணுதலாத் தோன்றியசீர்ப்
பிரமபுரந் தொழவிரும்பி
எண்ணுதலாஞ் செல்வத்தை
இயல்பாக அறிந்தோமே. 5

எங்கேனும் யாதாகிப்
பிறந்திடினுந் தன்னடியார்க்
கிங்கேயென் றருள்புரியும்
எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக்
குளிர்பிரம புரத்துறையுஞ்
சங்கேயொத் தொளிர்மேனிச்
சங்கரன்றன் தன்மைகளே. 6

சிலையதுவெஞ் சிலையாகத்
திரிபுரமூன் றெரிசெய்த
இலைநுனைவேற் தடக்கையன்
ஏந்திழையா ளொருகூறன்
அலைபுனல்சூழ் பிரமபுரத்
தருமணியை அடிபணிந்தால்
நிலையுடைய பெருஞ்செல்வம்
நீடுலகிற் பெறலாமே. 7

எரித்தமயிர் வாளரக்கன்
வெற்பெடுக்கத் தோளொடுதாள்
நெரித்தருளுஞ் சிவமூர்த்தி
நீறணிந்த மேனியினான்
உரித்தவரித் தோலுடையான்
உறைபிரம புரந்தன்னைத்
தரித்தமனம் எப்போதும்
பெறுவார்தாம் தக்காரே. 8

கரியானும் நான்முகனுங்
காணாமைக் கனலுருவாய்
அரியானாம் பரமேட்டி
அரவஞ்சே ரகலத்தான்
தெரியாதான் இருந்துறையுந்
திகழ்பிரம புரஞ்சேர
உரியார்தாம் ஏழுலகும்
உடனாள உரியாரே. 9

உடையிலார் சீவரத்தார்
தன்பெருமை உணர்வரியான்
முடையிலார் வெண்டலைக்கை
மூர்த்தியாந் திருவுருவன்
பெடையிலார் வண்டாடும்
பொழிற்பிரம புரத்துறையுஞ்
சடையிலார் வெண்பிறையான்
தாள்பணிவார் தக்காரே. 10

தன்னடைந்தார்க் கின்பங்கள்
தருவானைத் தத்துவனைக்
கன்னடைந்த மதிற்பிரம
புரத்துறையுங் காவலனை
முன்னடைந்தான் சம்பந்தன்
மொழிபத்து மிவைவல்லார்
பொன்னடைந்தார் போகங்கள்
பலவடைந்தார் புண்ணியரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment