சொன்மலிந்த மறைநான்கா பாடல் வரிகள் (conmalinta marainanka) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் குடந்தை கீழ்க்கோட்டம் – கும்பகோணம் (நாகேச்சுரசுவாமிக் கோவில்) தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : குடந்தை கீழ்க்கோட்டம் – கும்பகோணம் (நாகேச்சுரசொன்மலிந்த மறைநான்கா
சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்
சொற்பொருளுங் கடந்தசுடர்ச் சோதி போலுங்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்
கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
மன்மலிந்த மணிவரைத்திண் டோ ளர் போலும்
மலையரையன் மடப்பாவை மணாளர் போலுங்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. 1
கானலிளங் கலிமறவ னாகிப் பார்த்தன்
கருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்
ஆனலிளங் கடுவிடையொன் றேறி அண்டத்
தப்பாலும் பலிதிரியும் அழகர் போலுந்
தேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்
செழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்
கூனலிளம் பிறைதடவு கொடிகொள் மாடக்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. 2
நீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்
நிலாவலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை
ஆறலைத்த சடைமுடியும் அம்பொற் றோளும்
அடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்
ஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையார் போலும்
ஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலுங்
கூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. 3
தக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்
சந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்
செக்கரொளி பவளவொளி மின்னின் சோதி
செழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்
மிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி
மிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங்
கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. 4
காலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங்
காமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்
ஆலதனில் அறம்நால்வர்க் களித்தார் போலும்
ஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்
நீலவுரு வயிரநிரைப் பச்சை செம்பொன்
நெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங்
கோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. 5
முடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும்
முளைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும்
அடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி
அணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத்
துடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு
சுடர்ச்சோதிக் கடிச்செம்பொன் மலைபோ லிந்நாள்
குடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. 6
காரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்
கமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்
சீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்
சிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்
பாரிலங்கு புனலனல்கால் பரமா காசம்
பருதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலுங்
கூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. 7
பூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்
புறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு
மாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்
மாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல
தீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து
திருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்
கோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. 8
பொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற்
பொறிகிளர்வெண் பூணநூற் புனிதர் போலுஞ்
சங்கரவக் கடன்முகடு தட்ட விட்டுச்
சதுரநட மாட்டுகந்த சைவர் போலும்
அங்கரவத் திருவடிக்காட் பிழைப்பத் தந்தை
அந்தணனை அறஎறிந்தார்க் கருளப் போதே
கொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. 9
ஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை
இப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே
கூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்
குறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்
தாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை
சரசுவதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்
கோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. 10
செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்
தித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்
நெறிகொண்ட குழலியுமை பாக மாக
நிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்
மறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்
மதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீ ழிட்டுக்
குறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலுங்
குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே. 11
திருச்சிற்றம்பலம்