Sivan Songs

சீரணி திகழ்திரு பாடல் வரிகள் | cirani tikaltiru Thevaram song lyrics in tamil

சீரணி திகழ்திரு பாடல் வரிகள் (cirani tikaltiru) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பாம்புரம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருப்பாம்புரம்
சுவாமி : பாம்புரேஸ்வரர்
அம்பாள் : வண்டார்குழலி

சீரணி திகழ்திரு

சீரணி திகழ்திரு மார்பில் வெண்ணூலர்
திரிபுர மெரிசெய்த செல்வர்
வாரணி வனமுலை மங்கையோர் பங்கர்
மான்மறி யேந்திய மைந்தர்
காரணி மணிதிகழ் மிடறுடை யண்ணல்
கண்ணுதல் விண்ணவ ரேத்தும்
பாரணி திகழ்தரு நான்மறை யாளர்
பாம்புர நன்னக ராரே. 1

கொக்கிற கோடு கூவிள மத்தம்
கொன்றையொ டெருக்கணி சடையர்
அக்கினொ டாமை பூண்டழ காக
அனலது ஆடுமெம் மடிகள்
மிக்கநல் வேத வேள்வியு ளெங்கும்
விண்ணவர் விரைமலர் தூவப்
பக்கம்பல் பூதம் பாடிட வருவார்
பாம்புர நன்னக ராரே. 2

துன்னலி னாடை யுடுத்ததன் மேலோர்
சூறைநல் லரவது சுற்றிப்
பின்னுவார் சடைகள் தாழவிட் டாடிப்
பித்தராய்த் திரியும்எம் பெருமான்
மன்னுமா மலர்கள் தூவிட நாளும்
மாமலை யாட்டியுந் தாமும்
பன்னுநான் மறைகள் பாடிட வருவார்
பாம்புர நன்னக ராரே. 3

துஞ்சுநாள் துறந்து தோற்றமு மில்லாச்
சுடர்விடு சோதியெம் பெருமான்
நஞ்சுசேர் கண்டம் உடையஎன் நாதர்
நள்ளிருள் நடஞ்செய்யும் நம்பர்
மஞ்சுதோய் சோலை மாமயி லாட
மாடமா ளிகைதன் மேலேறிப்
பஞ்சுசேர் மெல்லடிப் பாவையர் பயிலும்
பாம்புர நன்னக ராரே. 4

நதியதன் அயலே நகுதலை மாலை
நாண்மதி சடைமிசை யணிந்து
கதியது வாகக் காளிமுன் காணக்
கானிடை நடஞ்செய்த கருத்தர்
விதியது வழுவா வேதியர் வேள்வி
செய்தவர் ஓத்தொலி ஓவாப்
பதியது வாகப் பாவையுந் தாமும்
பாம்புர நன்னக ராரே. 5

ஓதிநன் குணர்வார்க் குணர்வுடை யொருவர்
ஒளிதிக ழுருவஞ்சேர் ஒருவர்
மாதினை யிடமா வைத்தஎம் வள்ளல்
மான்மறி யேந்திய மைந்தர்
ஆதிநீ அருளென் றமரர்கள் பணிய
அலைகடல் கடையஅன் றெழுந்த
பாதிவெண் பிறைசடை வைத்தஎம் பரமர்
பாம்புர நன்னக ராரே. 6

மாலினுக் கன்று சக்கர மீந்து
மலரவற் கொருமுகம் ஒழித்து
ஆலின்கீ ழறமோர் நால்வருக் கருளி
அனலது வாடும் எம்மடிகள்
காலனைக் காய்ந்து தம்கழ லடியாற்
காமனைப் பொடிபட நோக்கிப்
பாலனுக் கருள்கள் செய்தஎம் மடிகள்
பாம்புர நன்னக ராரே. 7

விடைத்தவல் லரக்கன் வெற்பினை யெடுக்க
மெல்லிய திருவிர லூன்றி
அடர்த்தவன் தனக்கன் றருள்செய்த அடிகள்
அனலது ஆடும்எம் மண்ணல்
மடக்கொடி யவர்கள் வருபுன லாட
வந்திழி அரிசிலின் கரைமேல்
படப்பையிற் கொணர்ந்து பருமணி சிதறும்
பாம்புர நன்னக ராரே. 8

கடிபடு கமலத் தயனொடு மாலுங்
காதலோ டடிமுடி தேடச்
செடிபடு வினைகள் தீர்த்தருள் செய்யுந்
தீவண ரெம்முடைச் செல்வர்
முடியுடை யமரர் முனிகணத் தவர்கள்
முறைமுறை யடிபணிந் தேத்தப்
படியது வாகப் பாவையுந் தாமும்
பாம்புர நன்னக ராரே. 9

குண்டர்சாக் கியருங் குணமிலா தாருங்
குற்றுவிட்டுடுக் கையர் தாமுங்
கண்டவா றுரைத்துக் கால்நிமிர்த் துண்ணுங்
கையர்தா முள்ளவா றறியார்
வண்டுசேர் குழலி மலைமகள் நடுங்க
வாரண முரிசெய்து போர்த்தார்
பண்டுநாம் செய்த பாவங்கள் தீர்ப்பார்
பாம்புர நன்னக ராரே. 10

பார்மலிந் தோங்கிப் பருமதில் சூழ்ந்த
பாம்புர நன்னக ராரைக்
கார்மலிந் தழகார் கழனிசூழ் மாடக்
கழுமல முதுபதிக் கவுணி
நார்மலிந் தோங்கும் நான்மறை ஞான
சம்பந்தன் செந்தமிழ் வல்லார்
சீர்மலிந் தழகார் செல்வம தோங்கிச்
சிவனடி நண்ணுவர் தாமே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment