சதுரம் மறைதான் பாடல் வரிகள் (caturam maraitan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமறைக்காடு – வேதாரண்யம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருமறைக்காடு – வேதாரண்யம்
சுவாமி : மறைக்காட்டு மணாளர்
அம்பாள் : யாழைப்பழித்த மொழியாள்

சதுரம் மறைதான்

சதுரம் மறைதான்
துதிசெய் துவணங்கும்
மதுரம் பொழில்சூழ்
மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத்
தருள்செய்க எனக்குன்
கதவந் திருக்காப்புக்
கொள்ளுங் கருத்தாலே. 1

சங்கந் தரளம்
மவைதான் கரைக்கெற்றும்
வங்கக் கடல்சூழ்
மறைக்காட் டுறைமைந்தா
மங்கை உமைபா
கமுமா கவிதென்கொல்
கங்கை சடைமே
லடைவித் தகருத்தே. 2

குரவங் குருக்கத்
திகள்புன் னைகள்ஞாழல்
மருவும் பொழில்சூழ்
மறைக்காட் டுறைமைந்தா
சிரமும் மலருந்
திகழ்செஞ் சடைதன்மேல்
அரவம் மதியோ
டடைவித் தலழகே. 3

படர்செம் பவளத்
தொடுபன் மலர்முத்தம்
மடலம் பொழில்சூழ்
மறைக்காட் டுறைமைந்தா
உடலம் முமைபங்
கமதாகியு மென்கொல்
கடல்நஞ் சமுதா
அதுவுண் டகருத்தே. 4

வானோர் மறைமா
தவத்தோர் வழிபட்ட
தேனார் பொழில்சூழ்
மறைக்காட் டுறைசெல்வா
ஏனோர் தொழுதேத்த
இருந்தநீ யென்கொல்
கானார் கடுவே
டுவனா னகருத்தே. 5

பலகா லங்கள்வே
தங்கள்பா தங்கள் போற்றி
மலரால் வழிபா
டுசெய்மா மறைக்காடா
உலகே ழுடையாய்
கடைதோ றும்முன்னென்கொல்
தலைசேர் பலிகொண்
டதிலுண் டதுதானே. 6

வேலா வலயத்
தயலே மிளிர்வெய்தும்
சேலார் திருமா
மறைக்காட் டுறைசெல்வா
மாலோ டயன்இந்
திரன்அஞ் சமுன்என்கொல்
காலார் சிலைக்கா
மனைக்காய்ந் தகருத்தே. 7

கலங்கொள் கடலோ
தம்உலா வுங்கரைமேல்
வலங்கொள் பவர்வாழ்த்
திசைக்கும் மறைக்காடா
இலங்கை யுடையான்
அடர்ப்பட் டிடரெய்த
அலங்கல் விரலூன்
றியருள் செய்தவாறே. 8

கோனென் றுபல்கோ
டியுருத் திரர்போற்றும்
தேனம் பொழில்சூழ்
மறைக்காட் டுறைசெல்வா
ஏனங் கழுகா
னவருன்னை முன்என்கொல்
வானந் தலமண்
டியுங்கண் டிலாவாறே. 9

வேதம் பலவோ
மம்வியந் தடிபோற்ற
ஓதம் முலவும்
மறைக்காட்டி லுறைவாய்
ஏதில் சமண்சாக்
கியர்வாக் கிவையென்கொல்
ஆத ரொடுதா
மலர்தூற்றி யவாறே. 10

காழிந் நகரான்
கலைஞான சம்பந்தன்
வாழிம் மறைக்கா
டனைவாய்ந் தறிவித்த
ஏழின் னிசைமா
லையீரைந் திவைவல்லார்
வாழி யுலகோர்
தொழவான் அடைவாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment