சடையா யெனுமால் பாடல் வரிகள் (cataiya yenumal) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருமருகல் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 2
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருமருகல்
சுவாமி : மாணிக்கவண்ணர்
அம்பாள் : வண்டுவார் குழலி

சடையா யெனுமால்

சடையா யெனுமால்
சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால்
வெருவா விழுமால்
மடையார் குவளை
மலரும் மருகல்
உடையாய் தகுமோ
இவள்உள் மெலிவே. 1

சிந்தா யெனுமால்
சிவனே யெனுமால்
முந்தா யெனுமால்
முதல்வா எனுமால்
கொந்தார் குவளை
குலவும் மருகல்
எந்தாய் தகுமோ
இவள்ஏ சறவே. 2

அறையார் கழலும்
மழல்வா யரவும்
பிறையார் சடையும்
முடையாய் பெரிய
மறையார் மருகல்
மகிழ்வா யிவளை
இறையார் வளைகொண்
டெழில்வவ் வினையே. 3

ஒலிநீர் சடையிற்
கரந்தா யுலகம்
பலிநீ திரிவாய்
பழியில் புகழாய்
மலிநீர் மருகல்
மகிழ்வா யிவளை
மெலிநீர் மையளாக்
கவும்வேண் டினையே. 4

துணிநீ லவண்ணம்
முகில்தோன் றியன்ன
மணிநீ லகண்டம்
உடையாய் மருகல்
கணிநீ லவண்டார்
குழலாள் இவள்தன்
அணிநீ லவொண்கண்
அயர்வாக் கினையே. 5

பலரும் பரவப்
படுவாய் சடைமேல்
மலரும் பிறையொன்
றுடையாய் மருகல்
புலருந் தனையுந்
துயிலாள் புடைபோந்
தலரும் படுமோ
அடியா ளிவளே. 6

வழுவாள் பெருமான்
கழல்வாழ் கவெனா
எழுவாள் நினைவாள்
இரவும் பகலும்
மழுவா ளுடையாய்
மருகற் பெருமான்
தொழுவா ளிவளைத்
துயராக் கினையே. 7

இலங்கைக் கிறைவன்
விலங்க லெடுப்பத்
துலங்கவ் விரலூன்
றலுந்தோன் றலனாய்
வலங்கொள் மதிள்சூழ்
மருகற் பெருமான்
அலங்கல் லிவளை
அலராக் கினையே. 8

எரியார் சடையும்
மடியும் மிருவர்
தெரியா ததொர்தீத்
திரளா யவனே
மரியார் பிரியா
மருகற் பெருமான்
அரியாள் இவளை
அயர்வாக் கினையே. 9

அறிவில் சமணும்
மலர்சாக் கியரும்
நெறியல் லனசெய்
தனர்நின் றுழல்வார்
மறியேந் துகையாய்
மருகற் பெருமான்
நெறியார் குழலி
நிறைநீக் கினையே. 10

வயஞா னம்வல்லார்
மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந்
தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந்
தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம்
விளங்கும் புகழே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment