சந்திரனை மாகங்கைத் பாடல் வரிகள் (cantiranai makankait) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவதிகைவீரட்டானம் தலம் நடுநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : நடுநாடு
தலம் : திருவதிகைவீரட்டானம்
சுவாமி : வீரட்டானேஸ்வரர்
அம்பாள் : திரிபுரசுந்தரி

சந்திரனை மாகங்கைத்

சந்திரனை மாகங்கைத் திரையால் மோதச்
சடாமகுடத் திருத்துமே சாம வேத
கந்தருவம் விரும்புமே கபால மேந்து
கையனே மெய்யனே கனக மேனிப்
பந்தணவு மெல்விரலாள் பாக னாமே
பசுவேறு மேபரம யோகி யாமே
ஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 1

ஏறேறி யேழுலகும் உழிதர் வானே
இமையவர்கள் தொழுதேத்த இருக்கின் றானே
பாறேறு படுதலையிற் பலிகொள் வானே
படவரவந் தடமார்பிற் பயில்வித் தானே
நீறேறு செழும்பவளக் குன்றொப் பானே
நெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவித் தானே
ஆறேறு சடைமுடிமேற் பிறைவைத் தானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 2

முண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே
முதலாகி நடுவாகி முடிவா னானே
கண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே
கதநாகங் கொண்டாடுங் காட்சி யானே
பிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றி யானே
பெருநிலநீர் தீவளிஆ காச மாகி
அண்டத்துக் கப்பாலாய் இப்பா லானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 3

செய்யனே கரியனே கண்டம் பைங்கண்
வெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக
வெய்யனே தண்கொன்றை மிலைத்த சென்னிச்
சடையனே விளங்குமழுச் சூல மேந்துங்
கையனே காலங்கள் மூன்றா னானே
கருப்புவிற் றனிக்கொடும்பூண் காமற் காய்ந்த
ஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே
அவனாகி லதிகைவீ ரட்ட னாமே. 4

பாடுமே யொழியாமே நால்வே தமும்
படர்சடைமேல் ஒளிதிகழப் பனிவெண் டிங்கள்
சூடுமே அரைதிகழத் தோலும் பாம்புஞ்
சுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங்
கூடுமே குடமுழவம் வீணை தாளங்
குறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூத்
தாடுமே அந்தடக்கை அனலேந் தும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 5

ஒழித்திடுமே உள்குவார் உள்ளத் துள்ள
உறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றைக் கண்ணால்
விழித்திடுமே காமனையும் பொடியா வீழ
வெள்ளப் புனற்கங்கை செஞ்சடைமேல்
இழித்திடுமே ஏழுலகுந் தானா கும்மே
இயங்குந் திரிபுரங்க ளோரம் பினால்
அழித்திடுமே ஆதிமா தவத்து ளானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 6

குழலோடு கொக்கரைகைத் தாளம் மொந்தை
குறட்பூதம் முன்பாடத் தானா டும்மே
கழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து
கனவின்கண் திருவுருவந் தான்காட் டும்மே
எழிலாருந் தோள்வீசி நடமா டும்மே
ஈமப் புறங்காட்டில் ஏமந் தோறும்
அழலாடு மேயட்ட மூர்த்தி யாமே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 7

மாலாகி மதமிக்க களிறு தன்னை
வதைசெய்து மற்றதனின் உரிவை கொண்டு
மேலாலுங் கீழாலுந் தோன்றா வண்ணம்
வெம்புலால் கைகலக்க மெய்போர்த் தானே
கோலாலம் படவரைநட் டரவு சுற்றிக்
குரைகடலைத் திரையலறக் கடைந்து கொண்ட
ஆலால முண்டிருண்ட கண்டத் தானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 8

செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்
செஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும்
வம்பினாள் மலர்க்கூந்த லுமையாள் காதல்
மணவாள னேவலங்கை மழுவா ளனே
நம்பனே நான்மறைகள் தொழநின் றானே
நடுங்காதார் புரமூன்றும் நடுங்கச் செற்ற
அம்பனே அண்டகோ சரத்து ளானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 9

எழுந்ததிரை நதித்துவலை நனைந்த திங்கள்
இளநிலாத் திகழ்கின்ற வளர்ச டையனே
கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி
கொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட
தழும்புளவே வரைமார்பில் வெண்ணூ லுண்டே
சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்தியசெந் திருவுருவில் வெண்ணீற் றானே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே. 10

நெடியானும் நான்முகனும் நேடிக் காணா
நீண்டானே நேரொருவ ரில்லா தானே
கொடியேறு கோலமா மணிகண் டனே
கொல்வேங்கை அதளனே கோவ ணவனே
பொடியேறு மேனியனே ஐயம் வேண்டிப்
புவலோகந் திரியுமே புரிநூ லானே
அடியாரை அமருலகம் ஆள்விக் கும்மே
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment