சாம்பலைப் பூசித் பாடல் வரிகள் (campalaip pucit) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் பசுபதி – திருவிருத்தம் தலம் பொதுப் பதிகங்கள் நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…
அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : பொதுப் பதிகங்கள்
தலம் : பசுபதி – திருவிருத்தம்சாம்பலைப் பூசித்
சாம்பலைப் பூசித் தரையிற்
புரண்டுநின் றாள்பரவி
ஏம்பலிப் பார்கட் கிரங்குகண்
டாயிருங் கங்கையென்னுங்
காம்பலைக் கும்பணைத் தோளி
கதிர்ப்பூண் வனமுலைமேற்
பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை
யாளும் பசுபதியே. 1
உடம்பைத் தொலைவித்துன் பாதந்
தலைவைத்த உத்தமர்கள்
இடும்பைப் படாமல் இரங்குகண்
டாயிரு ளோடச்செந்தீ
அடும்பொத் தனைய அழன்மழு
வாவழ லேயுமிழும்
படம்பொத் தரவரை யாயெம்மை
யாளும் பசுபதியே. 2
தாரித் திரந்தவி ராவடி
யார்தடு மாற்றமென்னும்
மூரித் திரைப்பௌவ நீக்குகண்
டாய்முன்னை நாளொருகால்
வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணை
வேள்வெந்து வீழச்செந்தீப்
பாரித்த கண்ணுடை யாயெம்மை
யாளும் பசுபதியே. 3
ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன்
பாத மிறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்விகண்
டாயண்ட மேயணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப்
பிளந்துவேய்த் தோளியஞ்சப்
பருவரைத் தோலுரித் தாயெம்மை
யாளும் பசுபதியே. 4
இடுக்கொன்று மின்றியெஞ் சாமையுன்
பாத மிறைஞ்சுகின்றார்க்
கடர்க்கின்ற நோயை விலக்குகண்
டாயண்டம் எண்டிசையுஞ்
சுடர்த்திங்கள் சூடிச் சுழற்கங்கை
யோடுஞ் சுரும்புதுன்றிப்
படர்க்கொண்ட செஞ்சடை யாயெம்மை
யாளும் பசுபதியே. 5
அடலைக் கடல்கழி வான்நின்
னடியிணை யேயடைந்தார்
நடலைப் படாமை விலக்குகண்
டாய்நறுங் கொன்றை திங்கள்
சுடலைப் பொடிச்சுண்ண மாசுணஞ்
சூளா மணிகிடந்து
படரச் சுடர்மகு டாயெம்மை
யாளும் பசுபதியே. 6
துறவித் தொழிலே புரிந்துன்
சுரும்படி யேதொழுவார்
மறவித் தொழிலது மாற்றுகண்
டாய்மதின் மூன்றுடைய
அறவைத் தொழில்புரிந் தந்தரத்
தேசெல்லு மந்திரத்தேர்ப்
பறவைப் புரமெரித் தாயெம்மை
யாளும் பசுபதியே. 7
இப்பதிகத்தில் 8-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 8
இப்பதிகத்தில் 9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 9
சித்தத் துருகிச் சிவனெம்
பிரானென்று சிந்தையுள்ளே
பித்துப் பெருகப் பிதற்றுகின்
றார்பிணி தீர்த்தருளாய்
மத்தத் தரக்கன் இருபது
தோளு முடியுமெல்லாம்
பத்துற் றுறநெரித் தாயெம்மை
யாளும் பசுபதியே. 10
திருச்சிற்றம்பலம்