அவ்வினைக் கிவ்வினை பாடல் வரிகள் (avvinaik kivvinai) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திரு நீலகண்டம் தலம் பொதுப் பதிகங்கள் நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : பொதுப் பதிகங்கள்
தலம் : திரு நீலகண்டம்அவ்வினைக் கிவ்வினை

அவ்வினைக் கிவ்வினை யாமென்று
சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பதும்
உந்தமக் கூனமன்றே
கைவினை செய்தெம் பிரான்கழற்
போற்றுதும் நாமடியோஞ்
செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 1

காவினை யிட்டுங் குளம்பல
தொட்டுங் கனிமனத்தால்
ஏவினை யாலெயில் மூன்றெரித்
தீரென் றிருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றுதும் நாமடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 2

முலைத்தடம் மூழ்கிய போகங்களும்மற்
றெவையு மெல்லாம்
விலைத்தலை யாவணங் கொண்டெமை
யாண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமுந் தண்டும்
மழுவும் இவையுடையீர்
சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 3

விண்ணுல காள்கின்ற விச்சா
தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந்
தொழப்படும் புண்ணியரே
கண்ணிமை யாதன மூன்றுடை
யீருங் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 4

மற்றிணை யில்லா மலைதிரண்
டன்னதிண் டோ ளுடையீர்
கிற்றெமை யாட்கொண்டு கேளா
தொழிவதுந் தன்மைகொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்துந்
திருவடி யேயடைந்தோம்
செற்றெமைத் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 5

மறக்கு மனத்தினை மாற்றியெம்
மாவியை வற்புருத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக்
கீழ்ப்பிழை யாதவண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை
யேத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 6

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று. 7

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை
கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை
யேத்துதும் நாமடியோம்
செருவி லரக்கனைச் சீரி
லடர்த்தருள் செய்தவரே
திருவிலித் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 8

நாற்ற மலர்மிசை நான்முகன்
நாரணன் வாதுசெய்து
தோற்ற முடைய அடியும்
முடியுந் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந் தொழுது
வணங்குதும் நாமடியோம்
சீற்றம தாம்வினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 9

சாக்கியப் பட்டுஞ் சமணுரு
வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி இருதலைப்
போகமும் பற்றும்விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடை
யீரடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெ
றாதிரு நீலகண்டம். 10

பிறந்த பிறவியிற் பேணியெஞ்
செல்வன் கழலடைவான்
இறந்த பிறவியுண் டாகில்
இமையவர் கோனடிக்கண்
திறம்பயில் ஞானசம் பந்தன
செந்தமிழ் பத்தும்வல்லார்
நிறைந்த உலகினில் வானவர்
கோனொடுங் கூடுவரே.

இது திருக்கொடிமாடச் செங்குன்றூரில் அடியார்களுக்குக்
கண்ட சுரப்பிணிநீங்க வோதியருளியது. 11

திருச்சிற்றம்பலம்

Leave a Comment