அட்டுமின் இல்பலி பாடல் வரிகள் (attumin ilpali) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருநல்லூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருநல்லூர்
சுவாமி : கல்யாணசுந்தரேஸ்வரர்
அம்பாள் : கல்யாண சுந்தரி

அட்டுமின் இல்பலி

அட்டுமின் இல்பலி யென்றென்
றகங்கடை தோறும்வந்து
மட்டவி ழுங்குழ லார்வளை
கொள்ளும் வகையென்கொலோ
கொட்டிய பாணி யெடுத்திட்ட
பாதமுங் கோளரவும்
நட்டநின் றாடிய நாதர்நல்
லூரிடங் கொண்டவரே. 1

பெண்ணிட்டம் பண்டைய தன்றிவை
பெய்பலிக் கென்றுழல்வார்
நண்ணிட்டு வந்து மனைபுகுந்
தாரும்நல் லூரகத்தே
பண்ணிட்ட பாடலர் ஆடல
ராய்ப்பற்றி நோக்கிநின்று
கண்ணிட்டுப் போயிற்றுக் காரண
முண்டு கறைக்கண்டரே. 2

படவேர் அரவல்குற் பாவைநல்
லீர்பக லேயொருவர்
இடுவார் இடைப்பலி கொள்பவர்
போலவந் தில்புகுந்து
நடவார் அடிகள் நடம்பயின்
றாடிய கூத்தர்கொலோ
வடபாற் கயிலையுந் தென்பால்நல்
லூருந்தம் வாழ்பதியே. 3

செஞ்சுடர்ச் சோதிப் பவளத்
திரள்திகழ் முத்தனைய
நஞ்சணி கண்டன்நல் லூருறை
நம்பனை நானொருகாற்
துஞ்சிடைக் கண்டு கனவின்
றலைத்தொழு தேற்கவன்றான்
நெஞ்சிடை நின்றக லான்பல
காலமும் நின்றனனே. 4

வெண்மதி சூடி விளங்கநின்
றானைவிண் ணோர்கள்தொழ
நண்ணில யத்தொடு பாட
லறாதநல் லூரகத்தே
திண்ணிலை யங்கொடு நின்றான்
திரிபுர மூன்றெரித்தான்
கண்ணுளும் நெஞ்சத் தகத்தும்
உளகழற் சேவடியே. 5

தேற்றப் படத்திரு நல்லூ
ரகத்தே சிவனிருந்தாற்
தோற்றப் படச்சென்று கண்டுகொள்
ளார்தொண்டர் துன்மதியால்
ஆற்றிற் கெடுத்துக் குளத்தினிற்
றேடிய ஆதரைப்போற்
காற்றிற் கடுத்துல கெல்லாந்
திரிதர்வர் காண்பதற்கே. 6

நாட்கொண்ட தாமரைப் பூத்தடஞ்
சூழ்ந்த நல்லூரகத்தே
கீட்கொண்ட கோவணங் காவென்று
சொல்லிக் கிறிபடத்தான்
வாட்கொண்ட நோக்கி மனைவியொ
டுமங்கொர் வாணிகனை
ஆட்கொண்ட வார்த்தை யுரைக்குமன்
றோவிவ் வகலிடமே. 7

அறைமல்கு பைங்கழ லார்ப்பநின்
றானணி யார்சடைமேல்
நறைமல்கு கொன்றையந் தாருடை
யானும்நல் லூரகத்தே
பறைமல்கு பாடலன் ஆடல
னாகிப் பரிசழித்தான்
பிறைமல்கு செஞ்சடை தாழநின்
றாடிய பிஞ்ஞகனே. 8

மன்னிய மாமறை யோர்மகிழ்ந்
தேத்த மருவியெங்குந்
துன்னிய தொண்டர்கள் இன்னிசை
பாடித் தொழுதுநல்லூர்க்
கன்னியர் தாமுங் கனவிடை
யுன்னிய காதலரை
அன்னியர் அற்றவர் அங்கண
னேயருள் நல்கென்பரே. 9

திருவமர் தாமரை சீர்வளர்
செங்கழு நீர்கொள்நெய்தல்
குருவமர் கோங்கங் குராமகிழ்
சண்பகங் கொன்றைவன்னி
மருவமர் நீள்கொடி மாட
மலிமறை யோர்கள்நல்லூர்
உருவமர் பாகத் துமையவள்
பாகனை உள்குதுமே. 10

செல்லேர் கொடியன் சிவன்பெருங்
கோயில் சிவபுரமும்
வல்லேன் புகவும் மதில்சூழ்
இலங்கையர் காவலனைக்
கல்லார் முடியொடு தோளிறச்
செற்ற கழலடியான்
நல்லூ ரிருந்த பிரான்அல்ல
னோநம்மை ஆள்பவனே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment