Sivan Songs

ஆதியன் ஆதிரையன் பாடல் வரிகள் | atiyan atiraiyan Thevaram song lyrics in tamil

ஆதியன் ஆதிரையன் பாடல் வரிகள் (atiyan atiraiyan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவெண்துறை – திருவண்டுதுரை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவெண்துறை – திருவண்டுதுரை
சுவாமி : வெண்டுறைநாதேசுவரர்
அம்பாள் : வேனெடுங்கண்ணியம்மை

ஆதியன் ஆதிரையன்

ஆதியன் ஆதிரையன் னனலாடிய ஆரழகன்
பாதியோர் மாதினொடும் பயிலும்பர மாபரமன்
போதிய லும்முடிமேற் புனலோடர வம்புனைந்த
வேதியன் மாதிமையால் விரும்பும்மிடம் வெண்டுறையே 1

காலனை யோருதையில் உயிர்வீடுசெய் வார்கழலான்
பாலொடு நெய்தயிரும் பயின்றாடிய பண்டரங்கன்
மாலைம தியொடுநீர் அரவம்புனை வார்சடையான்
வேலன கண்ணியொடும் விரும்பும்மிடம் வெண்டுறையே. 2

படைநவில் வெண்மழுவான் பலபூதப் படையுடையான்
கடைநவில் மும்மதிலும் எரியூட்டிய கண்ணுதலான்
உடைநவி லும்புலித்தோல் உடையாடையி னான்கடிய
விடைநவிலுங் கொடியான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 3

பண்ணமர் வீணையினான் பரவிப்பணி தொண்டர்கள்தம்
எண்ணமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவரியான்
பெண்ணமர் கூறுடையான் பிரமன்தலை யிற்பலியான்
விண்ணவர் தம்பெருமான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 4

பாரிய லும்பலியான் படியார்க்கும் அறிவரியான்
சீரிய லும்மலையாள் ஒருபாகமுஞ் சேரவைத்தான்
போரிய லும்புரமூன் றுடன்பொன்மலை யேசிலையா
வீரிய நின்றுசெய்தான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 5

ஊழிக ளாயுலகா யொருவர்க்கும் உணர்வரியான்
போழிள வெண்மதியும் புனலும்மணி புன்சடையான்
யாழின்மொ ழியுமையாள் வெருவவ்வெழில் வெண்மருப்பின்
வேழமு ரித்தபிரான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 6

கன்றிய காலனையும் முருளக்கனல் வாயலறிப்
பொன்றமுன் நின்றபிரான் பொடியாடிய மேனியினான்
சென்றிமை யோர்பரவுந் திகழ்சேவடி யான்புலன்கள்
வென்றவன் எம்மிறைவன் விரும்பும்மிடம் வெண்டுறையே. 7

கரமிரு பத்தினாலுங் கடுவன்சின மாயெடுத்த
சிரமொரு பத்துமுடை அரக்கன்வலி செற்றுகந்தான்
பரவவல் லார்வினைகள் அறுப்பானொரு பாகமும்பெண்
விரவிய வேடத்தினான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 8

கோலம லரயனுங் குளிர்கொண்டல் நிறத்தவனுஞ்
சீலம றிவரிதாய்த் திகழ்ந்தோங்கிய செந்தழலான்
மூலம தாகிநின்றான் முதிர்புன்சடை வெண்பிறையான்
வேலைவி டமிடற்றான் விரும்பும்மிடம் வெண்டுறையே. 9

நக்குரு வாயவருந் துவராடைந யந்துடையாம்
பொக்கர்கள் தம்முரைகள் ளவைபொய்யென எம்மிறைவன்
திக்குநி றைபுகழார் தருதேவர்பி ரான்கனகம்
மிக்குயர் சோதியவன் விரும்பும்மிடம் வெண்டுறையே. 10

திண்ணம ரும்புரிசைத் திருவெண்டுறை மேயவனைத்
தண்ணம ரும்பொழில்சூழ் தருசண்பையர் தந்தலைவன்
எண்ணமர் பல்கலையான் இசைஞானசம் பந்தன்சொன்ன
பண்ணமர் பாடல்வல்லார் வினையாயின பற்றறுமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment