ஆடினாய்நறு நெய்யொடு பாடல் வரிகள் (atinaynaru neyyotu) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் கோயில் – சிதம்பரம் தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு வடகரை
தலம் : கோயில் – சிதம்பரம்
சுவாமி : மூலத்தானநாதர், சபாநாயகர்
அம்பாள் : சிவகாமியம்மை

ஆடினாய்நறு நெய்யொடு

ஆடினாய்நறு நெய்யொடு பால்தயிர்
அந்தணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடினாயிடமா நறுங்கொன்றை நயந்தவனே
பாடினாய்மறை யோடுபல் கீதமும்
பல்சடைப்பனி கால்கதிர் வெண்திங்கள்
சூடினாயருளாய் சுருங்கஎம தொல்வினையே. 1

கொட்டமேகம ழுங்குழ லாளொடு
கூடினாயெரு தேறி னாய்நுதல்
பட்டமேபுனைவாய் இசைபாடுவ பாரிடமா
நட்டமேநவில் வாய்மறை யோர்தில்லை
நல்லவர்பிரி யாதசிற் றம்பலம்
இட்டமாவுறைவா யிவைமேவிய தென்னைகொலோ. 2

நீலத்தார்கரி யமிடற் றார்நல்ல
நெற்றிமேலுற்ற கண்ணி னார்பற்று
சூலத்தார் சுடலைப்பொடி நீறணிவார் சடையார்
சீலத்தார்தொழு தேத்துசிற் றம்பலஞ்
சேர்தலாற்கழற் சேவடி கைதொழக்
கோலத்தாயருளா யுனகாரணங் கூறுதுமே. 3

கொம்பலைத்தழ கெய்திய நுண்ணிடைக்
கோலவாண்மதி போல முகத்திரண்
டம்பலைத்தகண் ணாள்முலை மேவிய வார்சடையான்
கம்பலைத்தெழு காமுறு காளையர்
காதலாற்கழற் சேவடி கைதொழ
அம்பலத்துறை வான்அடியார்க் கடையாவினையே. 4

தொல்லைஆரமு துண்ணநஞ் சுண்டதோர்
தூமணிமிட றாபகு வாயதோர்
பல்லையார்தலை யிற்பலியேற்றுழல் பண்டரங்கா
தில்லையார்தொழு தேத்துசிற் றம்பலஞ்
சேர்தலாற்கழற் சேவடி கைதொழ
இல்லையாம்வினை தானெரியம்மதி லெய்தவனே. 5

ஆகந்தோயணி கொன்றை யாய்அனல்
அங்கையாய்அம ரர்க்கம ராஉமை
பாகந்தோய்பகவா பலியேற்றுழல் பண்டரங்கா
மாகந்தோய்பொழில் மல்குசிற் றம்பலம்
மன்னினாய்மழு வாளி னாய் அழல்
நாகந்தோயரையாய் அடியாரை நண்ணாவினையே. 6

சாதியார்பளிங் கின்னொடு வெள்ளிய
சங்கவார்குழை யாய்திக ழப்படும்
வேதியாவிகிர்தா விழவாரணி தில்லைதன்னுள்
ஆதியாய்க்கிட மாயசிற் றம்பலம்
அங்கையால்தொழ வல்லடி யார்களை
வாதியாதகலுந் நலியாமலி தீவினையே. 7

வேயினாற்பணைத் தோளியொ டாடலை
வேண்டினாய்விகிர் தாஉயிர் கட்கமு
தாயினாய்இடு காட்டெரியாட லமர்ந்தவனே
தீயினார்கணை யாற்புர மூன்றெய்த
செம்மையாய்திகழ் கின்றசிற் றம்பலம்
மேயினாய்கழ லேதொழு தெய்துதும் மேலுலகே. 8

தாரினாற்விரி கொன்றை யாய்மதி
தாங்குநீள் சடையாய் தலைவாநல்ல
தேரினார்மறுகின் திருவாரணி தில்லைதன்னுட்
சீரினால்வழி பாடொழி யாததோர்
செம்மையாலழ காயசிற் றம்பலம்
ஏரினாலமர்ந்தா யுனசீரடி யேத்துதுமே. 9

வெற்றரையுழல் வார்துவ ராடைய
வேடத்தாரவர் கள்ளுரை கொள்ளன்மின்
மற்றவருலகின் அவலம்மவை மாற்றகில்லார்
கற்றவர்தொழு தேத்துசிற் றம்பலங்
காதலாற்கழற் சேவடி கைதொழ
உற்றவருலகின் னுறுதிகொள வல்லவரே. 10

நாறுபூம்பொழில் நண்ணிய காழியுள்
நான்மறைவல்ல ஞான சம்பந்தன்
ஊறும்இன் தமிழா லுயர்ந்தாருறை தில்லைதன்னுள்
ஏறுதொல்புக ழேந்துசிற் றம்பலத்
தீசனைஇசை யாற்சொன்ன பத்திவை
கூறுமாறுவல்லார் உயர்ந்தாரொடுங் கூடுவரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment