ஆடினா ரொருவர் பாடல் வரிகள் (atina roruvar) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்பழனம் தலம் சோழநாடு வடகரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 4
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்பழனம்
சுவாமி : ஆபத்சகாயர்
அம்பாள் : பெரியநாயகியம்மை

ஆடினா ரொருவர்

ஆடினா ரொருவர் போலு
மலர்கமழ் குழலி னாளைக்
கூடினா ரொருவர் போலுங்
குளிர்புனல் வளைந்த திங்கள்
சூடினா ரொருவர் போலுந்
தூயநன் மறைகள் நான்கும்
பாடினா ரொருவர் போலும்
பழனத்தெம் பரம னாரே. 1

போவதோர் நெறியு மானார்
புரிசடைப் புனித னார்நான்
வேவதோர் வினையிற் பட்டு
வெம்மைதான் விடவுங் கில்லேன்
கூவல்தான் அவர்கள் கேளார்
குணமிலா ஐவர் செய்யும்
பாவமே தீர நின்றார்
பழனத்தெம் பரம னாரே. 2

கண்டராய் முண்ட ராகிக்
கையிலோர் கபால மேந்தித்
தொண்டர்கள் பாடி யாடித்
தொழுகழற் பரம னார்தாம்
விண்டவர் புரங்க ளெய்த
வேதியர் வேத நாவர்
பண்டையென் வினைகள் தீர்ப்பார்
பழனத்தெம் பரம னாரே. 3

நீரவன் தீயி னோடு
நிழலவன் எழில தாய
பாரவன் விண்ணின் மிக்க
பரமவன் பரம யோகி
யாரவ னண்ட மிக்க
திசையினோ டொளிக ளாகிப்
பாரகத் தமுத மானார்
பழனத்தெம் பரம னாரே. 4

ஊழியா ரூழி தோறும்
உலகினுக் கொருவ ராகிப்
பாழியார் பாவந் தீர்க்கும்
பராபரர் பரம தாய
ஆழியான் அன்னத் தானும்
அன்றவர்க் களப் பரிய
பாழியார் பரவி யேத்தும்
பழனத்தெம் பரம னாரே. 5

ஆலின்கீழ் அறங்க ளெல்லாம்
அன்றவர்க் கருளிச் செய்து
நூலின்கீ ழவர்கட் கெல்லா
நுண்பொரு ளாகி நின்று
காலின்கீழ்க் காலன் றன்னைக்
கடுகத்தான் பாய்ந்து பின்னும்
பாலின்கீழ் நெய்யு மானார்
பழனத்தெம் பரம னாரே. 6

ஆதித்தன் அங்கி சோமன்
அயனொடு மால்பு தனும்
போதித்து நின்று லகிற்
போற்றிசைத் தாரி வர்கள்
சோதித்தா ரேழு லகுஞ்
சோதியுட் சோதி யாகிப்
பாதிப்பெண் ணுருவ மானார்
பழனத்தெம் பரம னாரே. 7

காற்றனாற் காலற் காய்ந்து
காருரி போர்த்த ஈசர்
தோற்றனார் கடலுள் நஞ்சைத்
தோடுடைக் காதர் சோதி
ஏற்றினார் இளவெண் டிங்கள்
இரும்பொழில் சூழ்ந்த காயம்
பாற்றினார் வினைக ளெல்லாம்
பழனத்தெம் பரம னாரே. 8

கண்ணனும் பிரம னோடு
காண்கில ராகி வந்தே
எண்ணியுந் துதித்து மேத்த
எரியுரு வாகி நின்று
வண்ணநன் மலர்கள் தூவி
வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்தப்
பண்ணுலாம் பாடல் கேட்டார்
பழனத்தெம் பரம னாரே. 9

குடையுடை அரக்கன் சென்று
குளிர்கயி லாய வெற்பின்
இடைமட வரலை அஞ்ச
எடுத்தலும் இறைவன் நோக்கி
விடையுடை விகிர்தன் றானும்
விரலினா லூன்றி மீண்டும்
படைகொடை அடிகள் போலும்
பழனத்தெம் பரம னாரே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment