ஆடல் அரவசைத்தான் பாடல் வரிகள் (atal aravacaittan) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருப்புகலி – சீர்காழி தலம் சோழநாடு வடகரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 1
நாடு : சோழநாடு வடகரை
தலம் : திருப்புகலி – சீர்காழி
சுவாமி : பிரமபுரீஸ்வரர்
அம்பாள் : திருநிலைநாயகி

ஆடல் அரவசைத்தான்

ஆடல் அரவசைத்தான் அருமாமறை
தான்விரித்தான் கொன்றை
சூடிய செஞ்சடையான் சுடுகா
டமர்ந்தபிரான்
ஏடவிழ் மாமலையாள் ஒருபாகம்
அமர்ந்தடியார் ஏத்த
ஆடிய எம்மிறையூர் புகலிப்
பதியாமே. 1

ஏல மலிகுழலார் இசைபாடி
யெழுந்தருளாற் சென்று
சோலை மலிசுனையிற்
குடைந்தாடித் துதிசெய்ய
ஆலை மலிபுகைபோ யண்டர்வானத்தை
மூடிநின்று நல்ல
மாலை யதுசெய்யும்
புகலிப் பதியாமே. 2

ஆறணி செஞ்சடையான் அழகார்புர
மூன்றும்அன்று வேவ
நீறணி யாகவைத்த
நிமிர்புன்சடை எம்இறைவன்
பாறணி வெண்டலையிற் பகலேபலி
யென்றுவந்து நின்ற
வேறணி கோலத்தினான்
விரும்பும் புகலியதே. 3

வெள்ள மதுசடைமேற் கரந்தான்விர
வார்புரங்கள் மூன்றுங்
கொள்ள எரிமடுத்தான்
குறைவின்றி யுறைகோயில்
அள்ளல் விளைகழனி யழகார்விரைத்
தாமரைமேல் அன்னம்
புள்ளினம் வைகியெழும்
புகலிப் பதிதானே. 4

சூடு மதிச்சடைமேற் சுரும்பார்மலர்க்
கொன்றைதுன்ற நட்டம்
ஆடும் அமரர்பிரான்
அழகாருமை யோடும்உடன்
வேடு படநடந்த விகிர்தன்
குணம்பரவித் தொண்டர்
பாட இனிதுறையும்
புகலிப் பதியாமே. 5

மைந்தணி சோலையின்வாய்
மதுப்பாய்வரி வண்டினங்கள்வந்து
நந்திசை பாடநடம்
பயில்கின்ற நம்பன்இடம்
அந்திசெய் மந்திரத்தால் அடியார்கள்
பரவியெழ விரும்பும்
புந்திசெய் நால்மறையோர்
புகலிப் பதிதானே. 6

மங்கையோர் கூறுகந்த மழுவாளன்
வார்சடைமேல் திங்கள்
கங்கை தனைச்சுரந்த
கறைக்கண்டன் கருதும்இடம்
செங்கயல் வார்கழனி திகழும்
புகலிதனைச் சென்றுதம்
அங்கையி னால்தொழுவார்
அவலம் அறியாரே. 7

வல்லிய நுண்ணிடையாள் உமையாள்
விருப்பனவன் நண்ணும்
நல்லிட மென்றறியான்
நலியும் விறலரக்கன்
பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப்
பாடலுமே கைவாள்
ஒல்லை அருள்புரிந்தான்
உறையும் புகலியதே. 8

தாதலர் தாமரைமேல் அயனுந்
திருமாலுந் தேடி
ஓதியுங் காண்பரிய
உமைகோன் உறையுமிடம்
மாதவி வான்வகுளம் மலர்ந்தெங்கும்
விரைதோய வாய்ந்த
போதலர் சோலைகள்சூழ்
புகலிப் பதிதானே. 9

வெந்துவர் மேனியினார் விரிகோ
வணம்நீத்தார் சொல்லும்
அந்தர ஞானமெல்லாம்
அவையோர் பொருளென்னேல்
வந்தெதி ரும்புரமூன் றெரித்தான்
உறைகோயில் வாய்ந்த
புந்தியி னார்பயிலும்
புகலிப் பதிதானே. 10

வேதமோர் கீதம்உணர் வாணர்தொழு
தேத்தமிகு வாசப்
போதனைப் போல்மறையோர்
பயிலும் புகலிதன்னுள்
நாதனை ஞானமிகு சம்பந்தன்
தமிழ்மாலை நாவில்
ஓதவல் லார்உலகில்
உறுநோய் களைவாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment