ஆறு சடைக்கணிவர் அங்கைத் பாடல் வரிகள் (aru cataikkanivar ankait) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவிடைமருதூர் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : திருவிடைமருதூர்
சுவாமி : மகாலிங்கேஸ்வரர்
அம்பாள் : பெருநலமுலையம்மை

ஆறு சடைக்கணிவர் அங்கைத்

ஆறு சடைக்கணிவர் அங்கைத் தீயர்
அழகர் படையுடையர் அம்பொற் றோள்மேல்
நீறு தடவந் திடப மேறி
நித்தம் பலிகொள்வர் மொய்த்த பூதங்
கூறுங் குணமுடையர் கோவ ணத்தர்
கோடால வேடத்தர் கொள்கை சொல்லின்
ஈறுந் நடுவு முதலு மாவார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 1

மங்குல் மதிவைப்பர் வான நாடர்
மடமா னிடமுடையர் மாத ராளைப்
பங்கில் மிகவைப்பர் பால்போல் நீற்றர்
பளிக்கு வடம்புனைவர் பாவ நாசர்
சங்கு திரையுகளுஞ் சாய்க்கா டாள்வர்
சரிதை பலவுடையர் தன்மை சொல்லின்
எங்கும் பலிதிரிவர் என்னுள் நீங்கார்
இடைமருது மேவி யிடங் கொண்டாரே. 2

ஆல நிழலிருப்பர் ஆகா யத்தர்
அருவரையி னுச்சியர் ஆணர் பெண்ணர்
காலம் பலகழித்தார் கறைசேர் கண்டர்
கருத்துக்குச் சேயார்தாங் காணா தார்க்குக்
கோலம் பலவுடையர் கொல்லை யேற்றர்
கொடுமழுவர் கோழம்ப மேய ஈசர்
ஏல மணநாறும் ஈங்கோய் நீங்கார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 3

தேசர் திறம்நினைவார் சிந்தை சேருஞ்
செல்வர் திருவாரூ ரென்றும் உள்ளார்
வாச மலரின்கண் மான்தோல் போர்ப்பர்
மருவுங் கரியுரியர் வஞ்சக் கள்வர்
நேசர் அடைந்தார்க் கடையா தார்க்கு
நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க் கென்றும்
ஈசர் புனற்பொன்னித் தீர்த்தர் வாய்த்த
இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 4

கரப்பர் கரியமனக் கள்வர்க் குள்ளங்
கரவாதே தந்நினைய கிற்பார் பாவந்
துரப்பர் தொடுகடலின் நஞ்ச முண்பர்
தூய மறைமொழியர் தீயா லொட்டி
நிரப்பர் புரமூன்றும் நீறு செய்வர்
நீள்சடையர் பாய்விடைகொண் டெங்கும் ஐயம்
இரப்பர் எமையாள்வர் என்னுள் நீங்கார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 5

கொடியா ரிடபத்தர் கூத்து மாடிக்
குளிர்கொன்றை மேல்வைப்பர் கோல மார்ந்த
பொடியாரு மேனியர் பூதிப் பையர்
புலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்
அடியார் குடியாவர் அந்த ணாளர்
ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற
இடியார் களிற்றுரியார் எவரும் போற்ற
இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 6

பச்சை நிறமுடையர் பாலர் சாலப்
பழையர் பிழையெலாம் நீக்கி யாள்வர்
கச்சைக் கதநாகம் பூண்ட தோளர்
கலனொன்று கையேந்தி இல்லந் தோறும்
பிச்சை கொளநுகர்வர் பெரியர் சாலப்
பிறங்கு சடைமுடியர் பேணுந் தொண்டர்
இச்சை மிகஅறிவர் என்று முள்ளார்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 7

காவார் சடைமுடியர் காரோ ணத்தர்
கயிலாய மன்னினார் பன்னு மின்சொற்
பாவார் பொருளாளர் வாளார் கண்ணி
பயிலுந் திருவுருவம் பாக மேயார்
பூவார் புனலணவு புன்கூர் வாழ்வர்
புரமூன்று மொள்ளழலாக் காயத் தொட்ட
ஏவார் சிலைமலையர் எங்குந் தாமே
இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 8

புரிந்தார் நடத்தின்கண் பூத நாதர்
பொழிலாரூர் புக்குறைவர் போந்து தம்மிற்
பிரிந்தா ரகல்வாய பேயுந் தாமும்
பிரியா ரொருநாளும் பேணு காட்டில்
எரிந்தா ரனலுகப்பர் ஏழிலோசை
எவ்விடத்துந் தாமேயென் றேத்து வார்பால்
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும்
இடைமருது மேவி யிடங்கொண் டாரே. 9

விட்டிலங்கு மாமழுவர் வேலை நஞ்சர்
விடங்கர் விரிபுனல்சூழ் வெண்காட் டுள்ளார்
மட்டிலங்கு தார்மாலை மார்பில் நீற்றர்
மழபாடி யுள்ளுறைவர் மாகா ளத்தர்
சிட்டிலங்கு வல்லரக்கர் கோனை யன்று
செழுமுடியுந் தோளைந்நான் கடரக் காலால்
இட்டிரங்கி மற்றவனுக் கீந்தார் வென்றி
இடைமருது மேவி யிடங்கொண் டாரே.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment