அரவிரி கோடனீட லணிகாவிரி பாடல் வரிகள் (araviri kotanita lanikaviri) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் குடமூக்கு – கும்பக்கோணம் தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : குடமூக்கு – கும்பக்கோணம்
சுவாமி : கும்பேசுவரர்
அம்பாள் : மங்களநாயகியம்மை

அரவிரி கோடனீட லணிகாவிரி

அரவிரி கோடனீட
லணிகாவிரி யாற்றயலே
மரவிரி போதுமௌவல்
மணமல்லிகை கள்ளவிழுங்
குரவிரி சோலைசூழ்ந்த
குழகன்குட மூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி
யிருந்தானவன் எம்மிறையே. 1

ஓத்தர வங்களோடும்
ஒலிகாவிரி யார்த்தயலே
பூத்தர வங்களோடும்
புகைகொண்டடி போற்றிநல்ல
கூத்தர வங்களோவாக்
குழகன்குட மூக்கிடமா
ஏத்தர வங்கள்செய்ய
இருந்தானவன் எம்மிறையே. 2

மயில்பெடை புல்கியால
மணல்மேல்மட அன்னமல்கும்
பயில்பெடை வண்டுபண்செய்
பழங்காவிரிப் பைம்பொழில்வாய்க்
குயில்பெடை யோடுபாட
லுடையான்குட மூக்கிடமா
இயலொடு வானமேத்த
இருந்தானவன் எம்மிறையே. 3

மிக்கரை தாழவேங்கை
யுரியார்த்துமை யாள்வெருவ
அக்கர வாமையேன
மருப்போடவை பூண்டழகார்
கொக்கரை யோடுபாட
லுடையான்குட மூக்கிடமா
எக்கரை யாருமேத்த
இருந்தானவன் எம்மிறையே. 4

வடிவுடை வாட்டடங்கண்
ணுமையஞ்சவோர் வாரணத்தைப்
பொடியணி மேனிமூட
வுரிகொண்டவன் புன்சடையான்
கொடிநெடு மாடமோங்குங்
குழகன்குட மூக்கிடமா
இடிபடு வானமேத்த
இருந்தானவன் எம்மிறையே. 5

கழைவளர் கவ்வைமுத்தங்
கமழ்காவிரி யாற்றயலே
தழைவளர் மாவின்நல்ல
பலவின்கனி கள்தயங்குங்
குழைவளர் சோலைசூழ்ந்த
குழகன்குட மூக்கிடமா
இழைவளர் மங்கையோடும்
இருந்தானவன் எம்மிறையே. 6

மலைமலி மங்கைபாகம்
மகிழ்ந்தானெழில் வையமுய்யச்
சிலைமலி வெங்கணையாற்
சிதைத்தான்புர மூன்றினையுங்
குலைமலி தண்பலவின்
பழம்வீழ்குட மூக்கிடமா
இலைமலி சூலமேந்தி
இருந்தானவன் எம்மிறையே. 7

நெடுமுடி பத்துடைய
நிகழ்வாளரக் கன்னுடலைப்
படுமிடர் கண்டயரப்
பருமால்வரைக் கீழடர்த்தான்
கொடுமடல் தங்குதெங்கு
பழம்வீழ்குட மூக்கிடமா
இடுமணல் எக்கர்சூழ
இருந்தானவன் எம்மிறையே. 8

ஆரெரி ஆழியானும்
மலரானும் அளப்பரிய
நீரிரி புன்சடைமேல்
நிரம்பாமதி சூடிநல்ல
கூரெரி யாகிநீண்ட
குழகன்குட மூக்கிடமா
ஈரிரு கோவணத்தோ
டிருந்தானவன் எம்மிறையே. 9

மூடிய சீவரத்தார்
முதுமட்டையர் மோட்டமணர்
நாடிய தேவரெல்லாம்
நயந்தேத்திய நன்னலத்தான்
கூடிய குன்றமெல்லா
முடையான்குட மூக்கிடமா
ஏடலர் கொன்றைசூடி
யிருந்தானவன் எம்மிறையே. 10

வெண்கொடி மாடமோங்கு
விறல்வெங்குரு நன்னகரான்
நண்பொடு நின்றசீரான்
தமிழ்ஞானசம் பந்தனல்ல
தண்குட மூக்கமர்ந்தான்
அடிசேர்தமிழ் பத்தும்வல்லார்
விண்புடை மேலுலகம்
வியப்பெய்துவர் வீடெளிதே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment