அரவணையான் சிந்தித் பாடல் வரிகள் (aravanaiyan cintit) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் திருவதிகைவீரட்டானம் தலம் நடுநாடு நாட்டில் அப்பர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : அப்பர்
திருமுறை : 6
நாடு : நடுநாடு
தலம் : திருவதிகைவீரட்டானம்
சுவாமி : வீரட்டானேஸ்வரர்
அம்பாள் : திரிபுரசுந்தரி

அரவணையான் சிந்தித்

அரவணையான் சிந்தித் தரற்றும்மடி
அருமறையான் சென்னிக் கணியாமடி
சரவணத்தான் கைதொழுது சாரும்மடி
சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி
பரவுவார் பாவம் பறைக்கும்மடி
பதினெண் கணங்களும் பாடும்மடி
திரைவிரவு தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. 1

கொடுவினையா ரென்றுங் குறுகாவடி
குறைந்தடைந்தார் ஆழாமைக் காக்கும்மடி
படுமுழவம் பாணி பயிற்றும்மடி
பதைத்தெழுந்த வெங்கூற்றைப் பாய்ந்தவடி
கடுமுரணே றூர்ந்தான் கழற்சேவடி
கடல்வையங் காப்பான் கருதும்மடி
நெடுமதியங் கண்ணி யணிந்தானடி
நிறைகெடில வீரட்டம் நீங்காவடி. 2

வைதெழுவார் காமம்பொய் போகாவடி
வஞ்சவலைப் பாடொன் றில்லாவடி
கைதொழுது நாமேத்திக் காணும்மடி
கணக்கு வழக்கைக் கடந்தவடி
நெய்தொழுது நாமேத்தி யாட்டும்மடி
நீள்விசும்பை ஊடறுத்து நின்றவடி
தெய்வப் புனற்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. 3

அரும்பித்த செஞ்ஞாயி றேய்க்கும்மடி
அழகெழுத லாகா அருட்சேவடி
சுரும்பித்த வண்டினங்கள் சூழ்ந்தவடி
சோமனையுங் காலனையுங் காய்ந்தவடி
பெரும்பித்தர் கூடிப் பிதற்றும்மடி
பிழைத்தார் பிழைப்பறிய வல்லவடி
திருந்துநீர்த் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. 4

ஒருகாலத் தொன்றாகி நின்றவடி
ஊழிதோ றூழி உயர்ந்தவடி
பொருகழலும் பல்சிலம்பும் ஆர்க்கும்மடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
இருநிலத்தார் இன்புற்றங் கேத்தும்மடி
இன்புற்றார் இட்டபூ ஏறும்மடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. 5

திருமகட்குச் செந்தா மரையாமடி
சிறந்தவர்க்குத் தேனாய் விளைக்கும்மடி
பொருளவர்க்குப் பொன்னுரையாய் நின்றவடி
புகழ்வார் புகழ்தகைய வல்லவடி
உருவிரண்டு மொன்றோடொன் றொவ்வாவடி
உருவென் றுணரப் படாதவடி
திருவதிகைத் தென்கெடில நாடன்னடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. 6

உரைமாலை யெல்லா முடையவடி
உரையால் உணரப் படாதவடி
வரைமாதை வாடாமை வைக்கும்மடி
வானவர்கள் தாம்வணங்கி வாழ்த்தும்மடி
அரைமாத் திரையில் லடங்கும்மடி
அகலம் அளக்கிற்பார் இல்லாவடி
கரைமாங் கலிக்கெடில நாடன்னடி
கமழ்வீரட் டானக் காபாலியடி. 7

நறுமலராய் நாறு மலர்ச்சேவடி
நடுவாய் உலகநா டாயவடி
செறிகதிருந் திங்களுமாய் நின்றவடி
தீத்திரளா யுள்ளே திகழ்ந்தவடி
மறுமதியை மாசு கழுவும்மடி
மந்திரமுந் தந்திரமு மாயவடி
செறிகெடில நாடர் பெருமானடி
திருவீரட் டானத்தெஞ் செல்வனடி. 8

அணியனவுஞ் சேயனவு மல்லாவடி
அடியார்கட் காரமுத மாயவடி
பணிபவர்க்குப் பாங்காக வல்லவடி
பற்றற்றார் பற்றும் பவளவடி
மணியடி பொன்னடி மாண்பாமடி
மருந்தாய்ப் பிணிதீர்க்க வல்லவடி
தணிபாடு தண்கெடில நாடன்னடி
தகைசார் வீரட்டத் தலைவனடி. 9

அந்தாம ரைப்போ தலர்ந்தவடி
அரக்கனையும் ஆற்றல் அழித்தவடி
முந்தாகி முன்னே முளைத்தவடி
முழங்கழலாய் நீண்டவெம் மூர்த்தியடி
பந்தாடு மெல்விரலாள் பாகன்னடி
பவளத் தடவரையே போல்வானடி
வெந்தார் சுடலைநீ றாடும்மடி
வீரட்டங் காதல் விமலனடி.

திருச்சிற்றம்பலம்

Leave a Comment