அண்ணாவுங் கழுக்குன்றும் பாடல் வரிகள் (annavun kalukkunrum) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் பெருவேளூர் – காட்டூரையன்பேட்டை தலம் சோழநாடு தென்கரை நாட்டில் சம்பந்தர் அவர்களால் இயற்றப்பட்டது…

அருளியவர் : சம்பந்தர்
திருமுறை : 3
நாடு : சோழநாடு தென்கரை
தலம் : பெருவேளூர் – காட்டூரையன்பேட்டை
சுவாமி : பிரியாவீசுவரர்
அம்பாள் : அபின்னாம்பிகை

அண்ணாவுங் கழுக்குன்றும்

அண்ணாவுங் கழுக்குன்றும்
ஆயமலையவை வாழ்வார்
விண்ணோரும் மண்ணோரும்
வியந்தேத்த அருள்செய்வார்
கண்ணாவார் உலகுக்குக்
கருத்தானார் புரமெரித்த
பெண்ஆணாம் பெருமானார்
பெருவேளூர் பிரியாரே. 1

கருமானின் உரியுடையர்
கரிகாடர் இமவானார்
மருமானார் இவரென்றும்
மடவாளோ டுடனாவர்
பொருமான விடையூர்வ
துடையார்வெண் பொடிப்பூசும்
பெருமானார் பிஞ்ஞகனார்
பெருவேளூர் பிரியாரே. 2

குணக்குந்தென் திசைக்கண்ணுங்
குடபாலும் வடபாலுங்
கணக்கென்ன அருள்செய்வார்
கழிந்தோர்க்கு மொழிந்தோர்க்கும்
வணக்கஞ்செய் மனத்தராய்
வணங்காதார் தமக்கென்றும்
பிணக்கஞ்செய் பெருமானார்
பெருவேளூர் பிரியாரே. 3

இறைக்கொண்ட வளையாளோ
டிருகூறா யொருகூறு
மறைக்கண்டத் திறைநாவர்
மதிலெய்த சிலைவலவர்
கறைக்கொண்ட மிடறுடையார்
கனல்கிளருஞ் சடைமுடிமேல்
பிறைக்கொண்ட பெருமானார்
பெருவேளூர் பிரியாரே. 4

விழையாதார் விழைவார்போல்
விகிர்தங்கள் பலபேசிக்
குழையாதார் குழைவார்போற்
குணநல்ல பலகூறி
அழையாவும் அரற்றாவும்
அடிவீழ்வார் தமக்கென்றும்
பிழையாத பெருமானார்
பெருவேளூர் பிரியாரே. 5

விரித்தார்நான் மறைப்பொருளை
உமையஞ்ச விறல்வேழம்
உரித்தாராம் உரிபோர்த்து
மதில்மூன்றும் ஒருகணையால்
எரித்தாராம் இமைப்பளவில்
இமையோர்கள் தொழுதிறைஞ்சப்
பெருத்தாரெம் பெருமானார்
பெருவேளூர் பிரியாரே. 6

மறப்பிலா அடிமைக்கண்
மனம்வைப்பார் தமக்கெல்லாஞ்
சிறப்பிலார் மதிலெய்த
சிலைவல்லார் ஒருகணையால்
இறப்பிலார் பிணியில்லார்
தமக்கென்றுங் கேடிலார்
பிறப்பிலாப் பெருமானார்
பெருவேளூர் பிரியாரே. 7

எரியார்வேற் கடற்றானை
யிலங்கைக்கோன் தனைவீழ
முரியார்ந்த தடந்தோள்கள்
அடர்த்துகந்த முதலாளர்
வரியார்வெஞ் சிலைபிடித்து
மடவாளை யொருபாகம்
பிரியாத பெருமானார்
பெருவேளூர் பிரியாரே. 8

சேணியலும் நெடுமாலுந்
திசைமுகனுஞ் செருவெய்திக்
காணியல்பை யறிவிலராய்க்
கனல்வண்ணர் அடியிணைக்கீழ்
நாணியவர் தொழுதேத்த
நாணாமே யருள்செய்து
பேணியஎம் பெருமானார்
பெருவேளூர் பிரியாரே. 9

புற்றேறி யுணங்குவார்
புகையார்ந்த துகில்போர்ப்பார்
சொற்றேற வேண்டாநீர்
தொழுமின்கள் சுடர்வண்ணம்
மற்றேரும் பரிமாவும்
மதகளிரும் இவையொழியப்
பெற்றேறும் பெருமானார்
பெருவேளூர் பிரியாரே. 10

பைம்பொன்சீர் மணிவாரிப்
பலவுஞ்சேர் கனியுந்தி
அம்பொன்செய் மடவரலார்
அணிமல்கு பெருவேளூர்
நம்பன்றன் கழல்பரவி
நவில்கின்ற மறைஞான
சம்பந்தன் தமிழ்வல்லார்க்
கருவினைநோய் சாராவே.

திருச்சிற்றம்பலம்

About the author

Aanmeegam Lyrics

Leave a Comment